ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

2 mins read
d22d3622-7d73-42ac-bc67-d18d34b978f9
நிலநடுக்கம் ஏற்பட்ட சிந்தா ஜான் மாவட்டத்தில் தரைமட்டமான வீடுகளுக்கு இடையே சிறுமி ஒருத்தி. - படம்: இபிஏ

காபூல்: மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் புதன்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஒருவர் மாண்டதாகவும் மேலும் 120 பேர் காயமடைந்ததாகவும் ஹெராட் வட்டார மருத்துவமனை கூறியுள்ளது.

ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை நடந்த நிலநடுக்கத்தால் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தக் குழுக்களை அதிகாரிகள் பாதிப்படைந்துள்ள மாற்றுப் பகுதிகளுக்கு மாற்றினர்.

உலகில் இவ்வாண்டு ஏற்பட்ட மிகவும் மோசமான நிலநடுக்கமான சனிக்கிழமை நடந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் மாண்டனர் என்று தலிபான் அரசாங்கம் அறிவித்தது.

அந்த நிலநடுக்கத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகள், தற்போது ஏற்பட்டுள்ள பேரிடரால் மேலும் மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று ஹெராட் ஆளுநர் அலுவலகம் கூறியது.

ஹெராட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நில அதிர்வுகளால் பல வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகளும் மருத்துவக் குழுக்களும் காயமடைந்தோரை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்

பாகிஸ்தானை எல்லையாகக் கொண்ட கரடுமுரடான ஹிந்துகோஷ் மலைத்தொடர்களில் மிக வலுவான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. பல்லாண்டுகளாக நடந்த தொடர் போரினால் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்புகள் வெகுவாகப் பாழடைந்துவிட்டன. வெளிநாடுகளின் உதவியைச் சார்ந்திருந்த பொருளாதாரமும் மருத்துவத் துறையும் வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில் மீட்புப் பணிகள் முறையாக நடைபெறுவது சவாலாக உள்ளது.

பேரிடரால் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவிட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், அவசரகால மனிதாபிமான உதவியாக 3.5 மில்லியன் யூரோக்களை வழங்க உறுதியளித்தது.

ஏற்கெனவே அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கும் 2.5 மில்லியன் யூரோவுடன் புதியத் தொகை இணைக்கப்படும். இந்தத் தொகைகளை தவிர்த்து, இவ்வாண்டின் மனிதாபிமான உதவிக்கென ஆப்கானிஸ்தானுக்கு ஒன்றியம் 89 மில்லியன் வழங்கியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தங்குமிடம், மருந்துப்பொருள்கள், குடிநீர், சுகாதாரம் ஆகியவை தற்போதைய உடனடித் தேவைகளாக உள்ளன.

ஐக்கிய அரபுச் சிற்றரசு, அபுதாபியின் சின் சயீத் சுல்தான் அல் நஹ்யான் அறக்கட்டளையும் அதன் வெளியுறவு அமைச்சும் ஒருங்கிணைந்த அவசர உதவிகளைச் செய்துள்ளன.

ஐக்கிய நாட்டு நிறுவனம், ஆப்கானிஸ்தானின் அவசரகால மனிதாபிமான நிதியிலிருந்து 5 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

பாகிஸ்தான், ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உணவு, போர்வைகள், மருந்துகள், கூடாரங்கள் மற்றும் நிதி அனுப்ப உறுதியளித்துள்ளன.

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், $200,000 நிதியை ஆப்கானிஸ்தானில் இயங்கும் செம்பிறை அமைப்புக்கு முன்மொழிந்துள்ளதாக சீன அரசாங்க சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்