பாரிஸ்: பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது நடத்திய தாக்குதலில் வெளி நாட்டினர் பலர் மாண்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் அல்லது பிணைபிடிக்கப்பட்டனர்.
காணாமற்போன வெளிநாட்டினரில் பலர் இசைவிழா ஒன்றில் பங்கேற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.
தாய்லாந்தைச் சேர்ந்த 18 பேர் மாண்டதாகவும் மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் 11 பேர் பிணைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கர்கள் 10க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரைத் தீவிரவாதிகள் பிணைபிடித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
நேப்பாளக் குடிமக்கள் 10 பேர் தாக்குதலில் மாண்டதாகவும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஏழு பேர் மாண்டுவிட்டனர். 15 பேரைக் காணவில்லை.
பிரான்ஸ், தனது குடிமக்கள் நால்வர் உயிரிழந்ததாகவும் 13 பேரைக் காணவில்லை என்றும் கூறியது.
உக்ரேனியப் பெண்கள் இருவர் மாண்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யர்கள் இருவர் உயிரிழந்ததாக டெல் அவிவில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் கூறியது.
இவ்வேளையில், மேற்குக் கரையில் மலேசியர் ஐவர் சிக்கியுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று குழந்தைகளுடன் ஒரு தாயும் மற்றொரு பெண்ணும் சிக்கியிருப்பதாகவும் ஜோர்தானில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

