பாலஸ்தீன போராளிகளை ஒழிப்போம்: இஸ்ரேலின் புதிய அரசாங்கம் சூளுரை

பாலஸ்தீன போராளிகளை ஒழிப்போம்: இஸ்ரேலின் புதிய அரசாங்கம் சூளுரை

2 mins read
9581d3e6-4ec6-407f-9e17-ddf281f710fd
இஸ்ரேலில் உள்ள பீ’யரி என்ற பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியிலிருந்து 108 இஸ்ரேலியர் உடல்கள் மீட்கப்பட்டன. - படம்: இபிஏ

ஜெருசலம்: ஹமாஸ் போராளிகளின் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், அவசரகால அரசாங்கத்தை அமைத்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரை வழிநடத்த இந்த அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பூவுலகிலிருந்து பாலஸ்தீன போராளிகளை துடைத்தொழிப்போம் என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் சூளுரைத்துள்ளார்.

பிரதமர் நெட்டன்யாகுவும் முன்னாள் தற்காப்புப் படைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பென்னி கான்ட்ஸும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில், இரு தலைவர்களையும் தற்காப்பு அமைச்சர் யோவ் காலன்டையும் உள்ளடக்கிய அவசரகால அரசாங்கம் அமைக்க இணக்கம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா வட்டாரத்தை மாற்றியமைப்போம் என்று புதிய அரசாங்கம் சூளுரைத்துள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவித்தது.

“நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறோம் என்பதை எங்களுடைய எதிரிகளுக்குத் தெளிவாகக் காட்ட விரும்புகிறோம். அதைவிட முக்கியம், இஸ்ரேலிய குடிமக்களுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்தப் போரில் வெற்றி பெறுவோம்,” என்று அவசரகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை காணாத மூர்க்கமான தாக்குதலை ஹமாஸ் நடத்தியிருக்கிறது.

இஸ்ரேல் உடனடியாக காசா வட்டாரத்தின் மீது சரமாரியாக குண்டுகளை வீசி பதில் தாக்குதலை நடத்தியது. இதில் பாலஸ்தீன டவர் உட்பட பல கட்டடங்கள் தரைமட்டமாயின. சுமார் 1,055 பேர் உயிரிழந்தனர்.

அது மட்டுமல்லாமல் காசா வட்டாரத்தை சுற்றி இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. காசா வட்டாரத்துக்கான மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன போராளிகளை துடைத்தொழிக்க தரைவழித் தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொலைக்காட்சியில் உரையாற்றிய நெட்டன்யாகு, “எங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்துள்ளோம். நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் போர் இது,” என்று கூறியுள்ளார்.

“ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைவிடக் கொடூரமான எதிரியுடன் போரிட்டு வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார். அப்போது கான்ட்ஸ், காலன்ட் ஆகியோரும் உடன் இருந்தனர்

தற்காப்பு அமைச்சர் காலன்ட், “ஹமாஸ் என்று கூறப்படும் ஒன்றை துடைத்தொழிப்போம். அது இனி இருக்காது,” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் தற்காப்புப் படைத் தலைவர் திரு கான்ட்ஸ், ஒன்றாகச் சேர்ந்து வெற்றி பெற வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார்.

“அமைதிக்கு ஒரு நேரம் இருக்கிறது. போருக்கு ஒரு நேரம் இருக்கிறது. இப்போது போருக்கான நேரம்,” என்று திரு கான்ட்ஸ் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்