ஆறாவது நாளாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல நாடுகள் இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சண்டையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் அங்கிருந்து வெளியேறிச் செல்லவும் விமானச் சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் போராடுகின்றன. தாக்குதல்களை அடுத்து, நெருக்கடிகால காப்பீட்டுத் தொகை குறித்த சிக்கல்களையும் விமானச்சேவைத் துறை எதிர்கொண்டுள்ளது.
நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் பல அனைத்துலக விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதனால், அங்குள்ள வெளிநாட்டினர் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதவிக் கோரிக்கைகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் தூதரகச் சேவைகள், காணாமல் போன உறவினர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
நாடுகள் தத்தம் மக்களை வெளியேற்ற சிறப்பு விமானச் சேவைகளை ஏற்பாடு செய்து வருகின்றன. குறைந்தது 27 நாடுகள் இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கிடைக்கும் வழிகளைப் பயன்படுத்தி உடனடியாக இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
ஆசியான் வட்டார நாடுகள் மக்களை வெளியேற்ற ஒரே நேரத்தில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியா
பாலஸ்தீனத்திலிருந்து இந்தோனீசிய மக்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்ய நெருக்கடிகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி புதன்கிழமை தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தற்போது 45 இந்தோனீசியர்கள் உள்ளனர், அவர்களில் 10 பேர் காசா பகுதியில் உள்ளனர். மேலும் 230 பேர் இஸ்ரேலில் பல இடங்களில் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் அஜய்’
இந்தியர்களை அழைத்துவருவதற்கு ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. சிறப்பு விமானம் வியாழக்கிழமை இஸ்ரேலிலிருந்து இந்தியாவுக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிறப்பு விமானத்தில் செல்ல இடம் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்து இயக்கப்படும் விமானங்களில் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 900 இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதோடு, மிகப் பெரிய எண்ணிக்கையில் வர்த்தகர்கள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இஸ்ரேலில் உள்ளனர்.
‘சேஃப் டிராவல்’ இணையத்தளத்தில் 245 நியூசிலாந்து நாட்டினர் இஸ்ரேலிலும், 13 பேர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள நாடுகளுக்கு ஆகாயம், தரை, கடல் வழிகளையும் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் வேறு நாடுகள் வழியாக வணிக விமானச் சேவைகளை அந்நாடு நாடுகிறது.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பாதுகாப்பான பயண வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் அனைத்துலக விமான நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்கீக் புதன்கிழமை கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆஸ்திரேலியர்கள் வெளியேறுவதற்கான உதவி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அறிவித்தார்.
பென் குரியன் விமான நிலையத்திலிருந்து இலவச குவாண்டாஸ் விமானச் சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் புறப்படும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவிலிருந்து ஏதென்ஸுக்கு குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் வெளியேற்ற கனடா அரசாங்கம் விரைவில் இரு ராணுவ விமானங்களைப் பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று, தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானச் சேவை மூலம் 27 பேர், பெரும்பாலும் கனடியர்கள், இஸ்ரேலின் ஹைஃபாவிலிருந்து சைப்ரஸின் லார்னாகாவிற்கு சென்றதாக பயணிகளில் ஒருவரை மேற்கோள் காட்டி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அத்தகைய இரு சேவைகள் அடுத்த இருநாட்களில் செயல்படுத்தப்படும் என்றும் அச்செய்தி கூறியது.
இதற்கிடையில், புதன்கிழமை இஸ்ரேலிலிருந்து ராணுவ விமானம் மூலம் தம் மக்களை வெளியேற்றும் ஆஸ்திரியாவின் திட்டம், அதன் ஒரேயொரு சி-130 ஹெர்குலிஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்தானது. வணிக விமானத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு ஏற்பட்டது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுத்தியுள்ளது. புதன்கிழமை லண்டனிலிருந்து புறப்பட்ட விமானமும் மீண்டும் லண்டன் திரும்பியது. வெர்ஜின் அட்லாண்டிக், அடுத்த 72 மணி நேரத்திற்கு டெல் அவிவுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் எறிபடைத் தாக்குதல் காரணமாக வான்வெளித் துறை அதிகாரிகள் இஸ்ரேலுக்குள் பறக்கும் விமானங்களை எச்சரித்துள்ளனர்.
‘ப்ளைதுபாய்’ நிறுவனம் புதனன்று டெல் அவிவ் நகருக்கான சேவைகளை ஒரு நாளைக்கு நான்கிலிருந்து இரண்டாகக் குறைத்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய விமானச் சேவையான எல் அல் ஏதென்ஸ், ரோம், மாட்ரிட், புக்காரெஸ்ட், நியூயார்க், பாரிஸ், லார்னாகா இஸ்தான்புல் ஆகிய இடங்களுக்கு 12 கூடுதல் விமானங்களை இயக்குவதாகத் தெரிவித்துள்ளது.
அதன் மலிவுக் கட்டணச் சேவையான ‘அலகு சன் டோரு’ம் இஸ்தான்புல்லில் இருந்து மீட்பு விமானச் சேவைகளை இயக்கத் திட்டமிடுகிறது.

