தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியலை மீட்டெடுக்க உதவும் மலேசிய வரவு செலவுத் திட்டம்

2 mins read
cabf7651-9d20-4159-9125-a87588a20991
மெதுவடையும் பொருளியலை சமாளிக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாட்டின் பொருளியலை மீட்டெடுக்கும் முயற்சியாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் அந்த மிகப்பெரிய வரவு செலவுத் திட்டத்தில் 393.8 பில்லியன் ரிங்கிட் (S$114 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகின் நிச்சயமற்ற சூழலால் மெதுவடையும் பொருளியலைச் சமாளிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

திரு அன்வாரின் நிர்வாகம் பிப்ரவரி மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து செலவினத்தை 388.1 பில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்தியது.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு பெரும் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 90 பில்லியன் ரிங்கிட். இதில் அத்துறையின் மேம்பாட்டுக்காக 19.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஆகப்பெரிய தொகை கல்விக்கும் பாதுகாப்புக்கும் செலவிடப்படுகிறது. கல்விக்கு 14.3 பில்லியன் ரிங்கிட்டும் பாதுகாப்புக்கு 12.6 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டுக்கான செலவு 2023ஆம் ஆண்டின் 97 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 90 பில்லியன் ரிங்கிட்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உள்கட்டமைப்புக்கான செலவு பாதிக்காது. காரணம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 1எம்டிபி நிதி மோசடியின் கடன்களை அடைக்க 13.2 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது. அந்தப் பிரச்சினை தற்போது இல்லையென்பதால் மேம்பாட்டுக்கான நிதி போதுமான அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, அன்வார் தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்தின் முதல் முழு அளவிலான வரவு செலவுத் திட்டமாகும்.

கடந்த 11 மாதங்களாக ஆட்சியில் இருந்து வரும் அன்வாரின் அரசாங்கம் அப்போதைக்கு அப்போது அரசியல் புயலில் சிக்கித் தவிக்கிறது. பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் ஆதரவு ஆளும் கூட்டணிக்கு குறைந்து வருகிறது.

நாட்டின் ஏழ்மையான மக்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சி கூட்டணியான பெரிகாத்தான் நேஷனலுக்கு ஆதரவளிப்பதாக பொருளியல் தரவுகள் காட்டுகின்றன.

இந்த நிலையில் பொருளியல் வளர்ச்சி என்பது எல்லாரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று புதன்கிழமை வெளியான டைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் நாட்டின் எந்தவொரு பகுதியும் புறக்கணிக்கப்படவோ அல்லது ஒதுக்கப்படவோ கூடாது. எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே மலேசிய நிதி அமைச்சின் பொருளியல் எதிர்பார்ப்பு பற்றிய அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 2023ஆம் ஆண்டுக்கான பொருளியல் நான்கு விழுக்காடு வளர்ச்சி காணும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2022ஆம் ஆண்டின் 8.7 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது பாதிக்கும் சற்றுக் குறைவாகும்.

2024ஆம் ஆண்டுக்கான பொருளியல் நான்கு முதல் ஐந்து விழுக்காடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம், வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்த முடிவு எடுத்துள்ளது. அது, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மூன்று விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என குறுகியகால இலக்கு நிர்ணயித்துள்ளது.

மெதுவடையும் பொருளியலை சமாளிக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
மெதுவடையும் பொருளியலை சமாளிக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார். - படம்: த ஸ்டார்
குறிப்புச் சொற்கள்