இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் உலக வர்த்தகத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்: உலக வர்த்தக நிறுவனம் எச்சரிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் உலக வர்த்தகத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்: உலக வர்த்தக நிறுவனம் எச்சரிக்கை

1 mins read
12e687cb-1601-411d-80c3-4043d65b4ce2
கிபுட்ஸ் பீரி வட்டாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த 270 பேர் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

மரகேஷ்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரிவடைந்தால் உலக வர்த்தகம் மேலும் மோசமடையும் என்று உலக வர்த்தக நிறுவனம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் இங்கோஸி ஒகோஞ்ஜோ இவியாலா தெரிவித்தார்.

ஆனால் போர் நீடித்தால் ஏற்கெனவே பலவீனமாக உள்ள உலக வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார்.

அனைத்துலக பணநிதியம், உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோரோக்கோ சென்றுள்ள அவர், மத்திய கிழக்கு விவகாரம் உலகப் பொருளியல் வளர்ச்சியை நசுக்கக் கூடும் என்று எச்சரித்தார்.

சீனாவில் தணிந்துள்ள சொத்துச்சந்தை, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆகியவற்றால் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“போர் விரிவடைந்தால் தள்ளாடிக் கொண்டிருக்கும் உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே எங்களின் அச்சம்,” என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

“உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஏற்கெனவே வர்த்தக வளர்ச்சியைப் பாதித்துள்ளது. ஆனால் இஸ்ரேலுக்கும் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே திடீரெனத் தொடங்கிய போரால் உலக வர்த்தகம் மோசமாகும்.

“இது, மற்ற வட்டாரங்களுக்கும் மேலும் பரவப் போகிறதா என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் காணப்படுகிறது. அப்படி ஒருவேளை பரவினால் பொருளியல் வளர்ச்சியில் பெரும் விளைவுகள் ஏற்படும்.

“ஆனால் போர் விரைவில் முடிவடையும் என்பதை எதிர்பார்ப்போம்,” என்று திருவாட்டி ஒகாஞ் இவியாலா கூறினார்.

குறிப்புச் சொற்கள்