பெய்ரூட்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிராப்துலாஹியன் வெள்ளிக்கிழமை ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான இஸ்ரேலின் போர் பற்றி தெஹ்ரான் ஆதரவு பெற்ற லெபனானிய ஆயுதபாணி அமைப்பான ஹில்புல்லா அமைப்பின் தலைவருடன் கலந்து விவாதித்தார்.
ஹில்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக சொந்தமாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது.
பெய்ரூட்டுக்கு வியாழக்கிழமை வருகை அளித்த ஈரான் அமைச்சர், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையது ஹாசன் நஸ்ரல்லாவையும் லெபனானின் காபந்து அரசாங்கப் பிரதமர் நஜிப் மிக்காடியையும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா புஹாபிப்பையும் சந்தித்தார்.
ஈரானிய அமைச்சரும் ஹிஸ்புல்லா தலைவரும் இஸ்ரேலை ஹமாஸ் இயக்கம் தாக்கியது பற்றி கலந்து பேசியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
ஹமாஸ் இயக்கத்தை ஈரான் ஆதரிக்கிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஹமாஸ் இயக்கத்தை ஈரான் பாராட்டியது.
ஆனால், அந்தத் தாக்குதலில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று ஈரான் தெரிவித்துவிட்டது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய அமைச்சர், காஸாவில் இஸ்ரேல் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க தன்னை அனுமதிக்கும்படி எகிப்து, ஐநா ஆகியவற்றையும் உதவி அமைப்புகளையும் ஈரான் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரங்கேற்றும் நடவடிக்கைகளுக்கு ஈரானிய நட்பு நாடுகளில் இருந்து பதிலடி கிடைக்கும். தொடர் விளைவுகளை இஸ்ரேல் அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று வியாழக்கிழமை ஈரானிய வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார்.

