இஸ்ரேல் கெடு; பாலஸ்தீனர்கள் தவிப்பு

இஸ்ரேல் கெடு; பாலஸ்தீனர்கள் தவிப்பு

3 mins read
d5157622-2d36-4b9c-b013-6c1ce97ebff3
இஸ்‌ரேலிய தாக்குதலால் தெற்கு காஸாவில் பரிதவித்து நிற்கும் பாலஸ்தீன தாயும் பிள்ளைகளும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: வடக்கு காஸாவில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தெற்கே தப்பிச் செல்வதற்கு இஸ்ரேல் விதித்திருந்த காலக்கெடு சனிக்கிழமை அதிகாலையில் முடிவடைந்த நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தெற்கு இஸ்ரேலில் கடந்த வாரம் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் இப்போதுதான் பதிலடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்கள் மின்சாரம், உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கின்றனர்.

காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்து வட்டார அரசாங்கங்களுடன் ஆலோசனை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, அவர்களை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. அத்தாக்குதலில் 1,300 இஸ்ரேலியர்கள், பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் ஏராளமானவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடித்துச்செல்லப்பட்டனர்.

காஸாபகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டதுடன், கடுமையான வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது. அந்த குண்டுவீச்சு தாக்குதல்களில் கிட்டத்தட்ட 1,900 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காஸா பகுதியில் வசித்த பாலஸ்தீன மக்கள் தெற்கு பகுதி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது. ஹமாஸையும் அதன் ராணுவத்தை அழித்தொழிப்பதே போரின் இலக்கு. என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. 

வடக்கு காஸாவில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை அங்கிருந்து 24 மணி நேரத்தில் வெளியேறச் சொன்னது இஸ்ரேல் அரசு. அதன்பின்னர், அந்தப் பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் திட்டம்.

ஆனால், “உடம்பில் இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் போராடுவோம்,” எனச் சூளுரைத்துள்ள ஹமாஸ் அமைப்பு, மக்கள் அங்கிருந்து செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறது.

இஸ்ரேலிய ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகாரி, பாலஸ்தீனிய எறிபடைக் குழுக்களைத் தாக்கவும், பணயக்கைதிகளின் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் படையினர் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறினார்.

“எதிரிகளை நாங்கள் இதுவரை கண்டிராத பலத்துடன் தாக்குகிறோம்” என்று திரு நெட்டன்யாகு வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் கூறினார். “இது தொடக்கம்தான்,” என்றார் அவர்.

பல ஆயிரம் மக்கள் வெள்ளிக்கிழமை வடக்கு காஸாவிலிருந்து கிளம்பியபோதும், பலர் அங்கேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

“காஸாவிலிருந்து வெளியேறுவதைவிட மரணம் மேலானது,” என்று இஸ்‌ரேல் தாக்குதலில் தரைமட்டமான அடுக்குமாடிக் கட்டடத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த 20 வயது முகமது கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையும் பிற அமைப்புகளும் பல மக்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளன. மேலும், உதவிகள் சென்றடைய முற்றுகையை நீக்க வேண்டும் என்று கூறின.

பிலடெல்பியா கப்பல் முனைய சுற்றுப்பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு பைடன், மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிப்பதுதான் முதன்மையான முன்னுரிமை என்றார்.

அப்பகுதியில் உள்ள அமெரிக்கக் குழுக்கள், இஸ்ரேல், எகிப்து, ஜோர்தான், பிற அரபு அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

ஹமாஸ் எதிர்ப்பு பாலஸ்தீனிய அரசாங்கத்தின் தலைவர் திரு மஹ்மூத் அப்பாஸ், ஜோர்தானில் உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனிடம், நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தப்பியோடிய அல்லது தற்போதைய இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட 1948ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் திரும்பும் என்று கூறினார். பெரும்பாலான காஸா மக்கள் அப்பகுதியிலிருந்து கிளம்பிய காஸா அகதிகளின் வழித்தோன்றல்கள்.

இந்த பூமியில் மக்கள்தொகை மிக நெருக்கமுள்ள இடங்களில் ஒன்று காஸா. இப்போது அங்கிருந்து வெளியேற வழி இல்லை. இஸ்ரேலின் முற்றுகை ஒருபுறமிருக்க, காஸாவுடனான தனது எல்லையைத் திறக்கும் அழைப்புகளுக்கு எகிப்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்