371 நாள்கள் ஆகாயத்தில் கழித்தவருக்கு பூமி புதிதாக இருந்தது

371 நாள்கள் ஆகாயத்தில் கழித்தவருக்கு பூமி புதிதாக இருந்தது

2 mins read
d7b5c7f0-ef48-46af-87e4-92ea34e130a5
அமெரிக்க நாசா அமைப்பின் விண்வெளி வீரர் ஃபிரான்க் ரூபியோ, விண்வெளியில் ஓராண்டுக்கும் அதிக காலம் இருந்துவிட்டு பூமிக்கு வந்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

டெக்சாஸ்: அமெரிக்காவின் நாசா அமைப்பின் விண்வெளி வீரர் ஃபிரான்க் ரூபியோ, விண்வெளியில் ஓராண்டுக்கும் அதிக காலம் இருந்துவிட்டு பூமிக்கு வந்துள்ளார்.

“பூமிக்கு வந்த பிறகு முதல் ஒரு சில நாள்களுக்கு நடப்பதுகூட கொஞ்சம் சிரமமாக இருந்தது. புவியீர்ப்பு விசையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

“பாதம், முதுகு கொஞ்சம் வலித்தது,” என்று அமெரிக்காவின் ஹுஸ்டன் மாநில டெக்சாஸ் நகரில் நாசாவின் ஜான்சன் விண்வெளி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபிராங்க் ரூபியோ தெரிவித்தார்.

விண்வெளியில் 371 நாள்கள் தங்கி ஆய்வு நடத்திய அவர் இரண்டு வாரங்களுக்குமுன் பூமிக்கு வந்தார்.

வழக்கமான ஆறு மாத ஆய்வுப் பயணமாகத்தான் அவர் சென்ற ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் உந்துகணையில் ஏறி மேலே சென்றார்.

வீரர்களைத் தரைக்குக் கொண்டு வர இருந்த சூயஸ் விண்கலம், மேலே சுற்றி வரும் அனைத்துலக ஆய்வு நிலையத்தில் சேர்க்கப்பட்டு அவசரகால ஆதரவுக்கலமாகப் பயன்படுத்தப்பட்டது.

பிறகு அதில் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக ரஷ்யா அதை பூமிக்குக் கொண்டுவந்தது. வீரர்களைப் பூமிக்குக் கொண்டுவர வேறு ஒன்றை அது அனுப்பியது.

ஆனாலும் ஃபிராங்க் ரூபியோ ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் அங்கேயே தங்கவேண்டியதாயிற்று. கடைசியாக, ரூபியோவும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ், டிமிட்ரி பெட்லின் ஆகியோரும் பூமிக்கு திரும்பினார்கள்.

ரஷ்யாவின் சூயஸ் எம்எஸ் 23 உதவியுடன் பூமியில் கஸக்ஸ்தானில் உள்ள செஸ்கஸ்தான் என்ற நகருக்கு அருகில் இறங்கு தளப் பகுதியில் இவர்கள் செப்டம்பர் 27ஆம் தேதி தரையிறங்கினர்.

விண்வெளியில் அதிக காலம் இருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை ரூபியோ படைத்துள்ளார். ஒரு முழு ஆண்டை பூமிக்கு வெளியே குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் கழித்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

குறிப்புச் சொற்கள்