சிட்னி: ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்திற்கான ஆலோசனை அமைப்பு ஒன்றை தோற்றுவிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் பூர்வகுடி மக்களை அங்கீகரிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய பொதுமக்கள் கருத்தெடுப்பு நடத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தில் பழங்குடி மக்களை உள்ளடக்குவதை ஆஸ்திரேலிய மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்று தெரிகிறது.
கருத்தெடுப்பில் கலந்துகொள்ள மொத்தம் 17.6 மில்லியன் மக்கள் தகுதி பெற்றிருந்தனர்.
எண்ணப்பட்ட 50.2 விழுக்காட்டு கருத்துச்சீட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கிட்டத்தட்ட 58.1 விழுக்காட்டினர் பழங்குடி மக்களை அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டனர் என்பது ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகம் அறிவித்த கணிப்புகள் மூலம் தெரியவந்தது.
ஆஸ்திரேலியாவின் மூன்று கிழக்கு மாநிலங்களில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு கருத்தெடுப்பு முடிவடைந்தது.
தலைநகர் பகுதியிலும் கருத்தெடுப்பு நிறைவடைந்தது.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, டாஸ்மேனியா, ஆஸ்திரேலிய தலைநகர் வட்டாரம் ஆகிய அந்தப் பகுதிகளில் கருத்துச் சீட்டுகள் எண்ணிக்கை தொடங்கியது.
அதேவேளையில், மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, வடக்குப் பகுதி ஆகியவற்றில் தொடர்ந்து கருத்தெடுப்பு நடந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியர்களிடம் ஒரு கருத்தெடுப்புச் சீட்டு கொடுக்கப்படும். அதில் சம்மதமா, இல்லையா என்பதை முடிவு செய்து சீட்டை கருத்தெடுப்புப் பெட்டியில் போட்டுவிட வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 122 ஆண்டுகள் ஆகின்றன.
அந்தச் சட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களையும் டோரஸ் நீரிணைத் தீவு பூர்வகுடி மக்களையும் அங்கீகரிப்பதா இல்லையா என்பது பற்றி இப்போது கருத்தெடுப்பு நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியர்கள் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தால், ‘நாடாளுமன்றத்திற்கான குரல்’ என்ற பழங்குடியினர் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
அந்த அமைப்பு, பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்துக்கு அறிவுரைகளை வழங்கும்.
ஆனால், இதற்கான வாய்ப்பு இருக்காது என்றே தெரியவந்தது.

