கோலாலம்பூர்: தேசிய வளர்ச்சிக்கு சுற்றுலா, உற்பத்தித் துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, மலேசியா விசா தாராளமயமாக்கல் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தின் மீதான உரையின்போது தெரிவித்துள்ளார்.
முக்கியத் துறைகளில் முதலீட்டாளர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி அட்டைகளைப் (எம்பிளாய்மென்ட் பாஸ்) பெறவும் இது வகைசெய்யும்.
தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறும்வகையில் பட்டம் பெற்ற அனைத்துலக மாணவர்களுக்கு நீண்டகால வருகை அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும்.
சுற்றுப் பயணிகளுக்கு குறிப்பாக இந்தியா, சீனா நாடுகளிலிருந்து வருவோருக்கான விசா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன. புதிய சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
கோலாலம்பூர் வந்து இறங்கியதும் உடனடியாக விசா வழங்குதல், உறவினர்களைச் சந்திப்பதற்கான விசா சலுகைகள், பலமுறை வந்து செல்லும் விசா ஆகிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.