கோலாலம்பூர்: வர்த்தகத்தை நிறுத்தும் நிலைக்கு வந்த மைஏர்லைன் விமானச் சேவையுடன், கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ள பலர் முன்வந்துள்ளதாக அதன் தற்காலிகப் பொறுப்பு அதிகாரி டத்தோ ஸ்ரீ அசருதீன் அப்துல் ரஹ்மான் கூறினார். அந்த முன்மொழிவுகளை கவனமாகப் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“எங்களது மதிப்புக்குரிய பயணிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தகுந்த விவரங்களை தொடர்ந்து வழங்குவோம்” என்றார் அவர். சமீபத்தில் எதிர்பாராத விதமாக அதன் பயணங்களை ரத்து செய்ய நேரிட்டதற்கு பயணிகளிடமும் விமானப் போக்குவரத்துச் சேவை முகவர்களிடமும் மைஏர்லைன்ஸ் நிறுவனம் மனவருத்தத்துடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
சுமார் 12,000 மின்னஞ்சல்களை நிறுவனம் எதிர்கொண்டுள்ளதால், கட்டணங்களை திரும்பப்பெறுவதற்குக் கால தாமதம் ஏற்படும். எனவே பாதிக்கப்பட்டப் பயணிகள் பொறுமையுடன் இருக்குமாறு வேண்டினார் அசருதீன்.
தற்போது நேரடி உதவித் தொலைபேசி எண்ணை ஏற்படுத்தும் முயற்சியில் மைஏர்லைன் உள்ளது. கட்டணங்களை மீட்டுக்கொள்ள பாதிப்படைந்தோர் அவர்களின் பயண (PNR) எண்ணுடன் customercare@myairline.my என்ற மின்னஞ்சலுக்கு எழுதவேண்டும்.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.10) காலை நிதி நெருக்கடியால் அனைத்துச் செயல்பாடுகளையும் திடீர் என மைஏர்லைன் அறிவிப்பு வரும்வரை நிறுத்திக்கொண்டது. பங்குதாரர்களின் மறுகட்டமைப்பும் முதலீடுகள் காரணமாகவும் அந்நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனத்தின் ஊழியர்கள் எவரும் தற்காலிக நீக்கம் செய்யப்படவில்லை. பாதிப்படைந்துள்ள பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்லாமல் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை ஏறத்தாழ 125,000 விமானப் பயண முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.