ஜோகூர் கடைத்தொகுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பொய்த் தகவல் பரப்ப வேண்டாம்: துணையமைச்சர் டியோ

1 mins read
54458baf-f951-4e5b-b88a-e11d7ee1be1c
மிட் வேலி சவுத்கீ கடைத்தொகுதியில் பொருள் வாங்கச் சென்றிருந்தோர், காரணம் குறிப்பிடாமல் தாங்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறினர். - படங்கள்:மியனாஹுஹு/எக்ஸ், ஆரிஃப்/எக்ஸ்

குலாய்: ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதிக்கும் ஹோட்டலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவலைப் பரப்ப வேண்டாமென சமூக ஊடகப் பயனாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பகிர்வதால் பொதுமக்கள் பதற்றமடையும் வாய்ப்பு இருப்பதை மலேசிய தொடர்பு, மின்னிலக்கத் துணையமைச்சர் டியோ நீ சிங் சுட்டினார்.

மிட் வேலி சவுத்கீ கடைத்தொகுதி நிர்வாகத்திற்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

அதையடுத்து, அந்தக் கடைத்தொகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிலர் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகத் துணையமைச்சர் டியோ கூறினார்.

இதனால் பொதுமக்களிடையே மேலும் அச்சம் பரவியதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் துல்லியமான தகவலை வெளியிடுவதற்கு முன்னரே இத்தகைய தகவல்கள் பரவின. ஆனால் அங்கே வெடிகுண்டு ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது என்று திருவாட்டி டியோ சொன்னார்.

சமூக ஊடகத்தினர், அதிகமானோரை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு மக்களை பீதியடையச் செய்யும் பொய்த் தகவல்களைப் பரப்பக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

குலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி டியோ, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பொய்த் தகவல் பரப்பியோர் குறித்து விசாரிப்பதில் காவல்துறையுடன் தமது அமைச்சு ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்