முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் மிரட்டல்

3 mins read
f90aa2ca-f304-412c-8cef-331c73db620d
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதியில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தயாரானது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹமாஸ் போராளி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதியில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தயாரானது.

அதற்கு முன்னதாக அறிக்கை ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டது. காஸா மீது முப்படைத் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரகடனம் செய்தது.

என்றாலும் அதற்கான நேரம் என்ன என்பதை அது தெரிவிக்கவில்லை.

அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதல் ஓயவில்லை என்றால் கடுமையான தொடர் விளைவுகளை அது எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் எச்சரித்தது.

ஹமாஸ் தீவிரவாதிகள் ஒன்பது நாட்களுக்கு முன் திடீரென்று இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அதில் 1,300 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆடவர்கள், பெண்கள், சிறார் உள்ளிட்ட இஸ்ரேல் மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் 150 பேரைப் பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலுக்குப் பதிலடியாக, வடக்கு காஸாவை இஸ்ரேல் சீர்குலைத்துவிட்டது.

இதுவரை இல்லாத அளவுக்குத் தாக்குல் நடத்தி உள்கட்டமைப்புகளைச் சிதைத்து அழித்துவிட்டது.

காஸா பகுதியில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிக்கிறார்கள். இஸ்ரேல் காஸாவை முழுமையாக முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் செய்துவிட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் 2,383 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. கிட்டதட்ட 10,000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் மாண்டவர்களில் கால்வாசிப் பேர் சிறார் என்று பாலஸ்தீன தரப்பு தெரிவித்தது.

வடக்கு காஸாவில் வசிக்கும் ஒரு மில்லியன் மக்களும் 24 மணி நேரத்திற்குள் தெற்கே போய்விட வேண்டும் என்று சனிக்கிழமை இஸ்ரேல் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தது.

அதையடுத்து கணிசமான பாலஸ்தீனர்கள் தெற்கே சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, லெபனானுடன் கூடிய இஸ்ரேலின் வடக்கு எல்லையில் பதற்றம் கூடியதாக தகவல்கள் தெரிவித்தன. 

ஹமாஸ்-இஸ்ரேல் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று லெபனானிய தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தரப்பை இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு கடுமையாக எச்சரித்தார்.

அப்படி போரைத் தொடங்கினால் லெபனான் நாசமாகிவிடும் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

இவ்வேளையில், ஐநாவிற்கான ஈரானின் பிரமுகர், சனிக்கிழமை பின்நேரத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார்.

“இஸ்ரேல் போர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது. இனப் படுகொலை செய்கிறது. உடனே அவற்றை நிறுத்த வேண்டும்.

“இல்லை எனில் சூழ்நிலை கட்டுப்படுத்த இயலாத நிலைக்குப் போய்விடும். கடும் பின் விளைவுகளை இஸ்ரேல் எதிர்நோக்க நேரிடும்,” என்று அவர் எச்சரித்தார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டும் ஈரான் ஆதரவு பெற்றவை.

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியா என்பவர், ஈரானின் வெளியுறவு அமைச்சரை சனிக்கிழமை கத்தாரில் சந்தித்தார்.

ஹமாஸ் இயக்கத்தின் குறிக்கோளைச் சாதிக்க தொடர்ந்து ஒத்துழைக்க அவர்கள் இணங்கினர்.

ஹமாஸ்-இஸ்ரேல் பிரச்சினையை எந்த ஒரு நாடும் விரிவுபடுத்தக் கூடாது என்று அமெரிக்காவும் இதர நாடுகளும் எச்சரித்துள்ளன.

பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துலக அமைப்புகளும் உதவி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இவ்வேளையில், நியூயார்க்கில் ஐநா தலைமைச் செயலாளருக்கு ரஷ்யா ஒரு வேண்டுகோள் விடுத்தது.

ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடர்பில் நகல் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்து திங்கட்கிழமை அதன் பேரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநாவை ரஷ்யா கேட்டுக்கொண்டது.

அந்தத் தீர்மானம், மனிதாபிமான போர் நிறுத்தக் கோரிக்கை விடுக்க வேண்டும்; குடிமக்களுக்கு எதிரான வன்செயல்களை, பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரியது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்