இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டோரில் ஐந்து சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
சனிக்கிழமை தென்கொரிய ராணுவ விமானம் அந்த மீட்புப் பணியில் ஈடுபட்டது. மொத்தம் 220 பேரை ஏற்றிக்கொண்டு தலைநகர் சோல் நோக்கி அவ்விமானம் சென்றது.
சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்ட தகவலை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
“ஐந்து சிங்கப்பூரர்களும் குடும்ப உறுப்பினர் ஒருவரும் டெல் அவிவில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்ட தகவலை வெளியுறவு அமைச்சு உறுதி செய்கிறது,” என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
கொரிய குடியரசு அரசாங்கம் ஏற்பாடு செய்த ராணுவப் போக்குவரத்து விமானம் மீட்ட 220 பேரில் 163 தென்கொரியர்கள், 51 ஜப்பானியர்களும் இருந்தனர்.
தனது குடிமக்களை பத்திரமாக வெளியேற்றியதற்கு கொரிய குடியரசு அரசாங்கத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.
சிங்கப்பூர் குடும்பத்தினரை இஸ்ரேலில் இருந்து மீட்டு சிங்கப்பூருக்குப் பத்திரமாக அனுப்பி வைப்பது தொடர்பாக டெல் அவிவ் மற்றும் சோலில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுடனும் தென்கொரியத் தூதரகத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

