தென்கொரியப் பேய் விழா விபரீதத்தால் மீட்புப் பணியாளர்களிடையே நீடிக்கும் பாதிப்பு

1 mins read
28b01d43-6b03-4494-8337-4c2e10c78386
2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று தென்கொரியாவின் சோல் நகரில் நடந்த கூட்ட நெரிசல் விபரீதத்தில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறியப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவின் இட்டாவோன் பகுதியில் 2022ஆம் ஆண்டு நடந்த பேய் விழா (ஹாலோவீன்) கொண்டாட்டத்தில் உயிர்கள் மட்டும் போகவில்லை. தென்கொரிய அரசாங்கம் வெளியிட்ட அண்மைய தரவுகளின் படி விபரீதம் நேர்ந்த இடத்திற்குச் சென்ற 1,316 தீயணைப்பு வீரர்கள் மனதளவில் இன்னமும் பாதிப்பை உணர்கின்றனர் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மீட்புப்பணியாளர்கள் வெவ்வேறு பக்கவிளைவுகளுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.

‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெரிய அளவிலான கூட்டம், ஒரே நேரத்தில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 159 பேர் உயிரிழந்ததுடன் 196 பேருக்குக் காயங்களும் ஏற்பட்டன.

“அதிர்ச்சியால் ஏற்படும் இத்தகைய பாதிப்பு, குறுகிய காலத்தில் தீர்ந்துவிடுவதில்லை. ஓய்வும் சிகிச்சையும் அதிகளவில் அவசியம்,” என்று முன்னாள் தீயணைப்பு வீரரான திரு ஓ உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மீட்புப்பணியாளர்கள் முழுமையாகக் குணமடைவதற்குப் போதுமான அவகாசம் தருவதை உறுதிப்படுத்த மேலும் அதிகப் பணியாளர்களை தீயணைப்புப் படை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென்கொரிய வரலாற்றில் அதிக உயிர்களைப் பறித்த மோசமான விபரீதம் இந்த இட்டாவோன் சம்பவமாகும்.

குறிப்புச் சொற்கள்