கராகஸ்: பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் பாலஸ்தீன மக்களைப் பிரதிநிதிப்பவை அல்ல என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘வாஃபா’ அதனைத் தெரிவித்தது.
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடனான தொலைபேசி உரையாடலில் திரு அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை இயக்கம்தான் பாலஸ்தீன மக்களைப் பிரதிநிதிக்கும் ஒரே அமைப்பு என்று வலியுறுத்தியதாக ‘வாஃபா’ குறிப்பிட்டது.
அண்மை மோதல்களில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என இருதரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்த அதிபர் அப்பாஸ், இருதரப்பிலிருந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்போரும் பொதுமக்களும் சிறைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக ‘வாஃபா’ தெரிவித்துள்ளது.

