பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் உள்ள மருத்துவர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருப்பதால் அத்தொழிலிலிருந்து அதிகமானோர் விலகி வருகின்றனர்.
வேலையைச் செய்து செய்து அவர்கள் களைத்துப் போகின்றனர். வேலையிடத்தில் அவர்கள் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதில் மலேசிய சுகாதார அமைச்சு தலையிடாத வரை தீராத தலைவலியாக இருக்கும் என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
சென்ற ஞாயிற்றுக்கிழமை தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பேசிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஃபாமி ஃபட்ஸில், 2022ஆம் ஆண்டில் மலேசிய ஒப்பந்த மருத்துவர்களின் பதவி விலகல் 1,131 விழுக்காடு அதிகரித்துள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது என்றார்.
2022ஆம் ஆண்டில் 1,354 ஒப்பந்த மருத்துவர்கள் பதவி விலகினர். இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 110 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
ஆண்டுக்கு ஆண்டு இந்தப்போக்கு கூடிக்கொண்டே வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் 168 ஒப்பந்த மருத்துவர்கள் தொழிலைவிட்டு விலகினர். தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் 479 பேரும், 2020ல் 511 பேரும் 2021ல் 768 பேரும் 2022ல் 1,354 பேரும் பதவி விலகினர் என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் திறனாளர்கள் பற்றாக்குறை விகிதம் 5.5 விழுக்காடாக இருக்கிறது என்று திரு ஃபாமி குறிப்பிட்டார். இது, உலகளாவிய 3.3 விழுக்காட்டுடன் ஒப்பிட்டால் மிக அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
திறனாளர்கள் பற்றாக்குறைக்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது.
பிரதமர் அன்வார் தலைமையிலான ஐக்கிய அரசாங்கம், எந்தவொரு மலேசியரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
இனத்தின் அடிப்படையில் இல்லாமல் தேவை அடிப்படையில் கொள்கை மாற்றங்களுக்கு அவசியமாகிறது. அப்போது, ஒவ்வொரு மலேசியர்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று திரு ஃபாமி மேலும் கூறினார்.
செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1 வரை மலேசிய மருத்துவர் சங்கம் ஆய்வை நடத்தியிருந்தது.
நாட்டில் உள்ள ஏறக்குறைய 30 முதல் 40 விழுக்காடு மருத்துவர்கள் தங்களுடைய தொழிலில் சில வகையான துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

