கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், மலிவுக் கட்டணச் சேவை வழங்கும் ‘மைஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிமாக ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அதனைத் தெரிவித்தார்.
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (அக். 16) பின்னேரம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்றார் அவர்.
“நிறுவனம் மூடப்படவில்லை. முதலீட்டாளர்களை எதிர்நோக்கி அது தனது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
“இது வர்த்தக விவகாரம்தான். இருந்தாலும் அதன் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்கிறோம்,” என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசிய அனைத்துலக வர்த்தகம், கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
‘மைஏர்லைன்ஸ்’ நிறுவனம் அடுத்த ஈராண்டுகளுக்கு வர்த்தக விமானச் சேவை வழங்குவதற்கான உரிமத்தை அண்மையில்தான் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நீட்டித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள், ஊழியர்கள் குறித்த பொறுப்பு அந்நிறுவனத்துக்கு உண்டு என்று நினைவுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் லோக் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 12ஆம் தேதி ‘மைஏர்லைன்ஸ்’ அதன் சேவையைத் திடீரென்று நிறுத்தியதால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல பயணிகள் தவிக்க நேரிட்டது.
2022 டிசம்பரில் சேவையைத் தொடங்கிய ‘மைஏர்லைன்ஸ்’, நிதி நெருக்குதலைத் தொடர்ந்து அதன் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அக்டோபர் 12ஆம் தேதி சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டது.