காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது: பைடன்

2 mins read
5ba5fcb2-5513-432d-8b46-4f99cabb1f97
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 29 அமெரிக்கர்கள் உட்பட 1,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தமது நட்பு நாடான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எண்ணத்தைக் கைவிடவேண்டும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: காஸா குறுநிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தைக் கைவிடுமாறு இஸ்ரேலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதற்குப் பிறகு முதல்முறையாக தனது நட்பு நாடான இஸ்ரேலை வெளிப்படையாக அவர் எச்சரித்து உள்ளார்.

போரில் 29 அமெரிக்கர்கள் உட்பட 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் திரு பைடன், காஸாவைக் கைப்பற்றும் முயற்சியாக இஸ்ரேல் பதிலடி கொடுத்தபோதும் அதனை அவர் தட்டிக் கேட்கவில்லை.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பேட்டியில், காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்க முயலும் இஸ்ரேலை அவர் எச்சரித்தார்.

“இஸ்ரேல் அவ்வாறு நினைப்பது பெருந்தவறு என்று கருதுகிறேன்.

“காஸா என்பது ஹமாஸும் அதன் தீவிரவாதப் பிரிவும் இயங்குகிற ஒரு பகுதி என்பதோடு அங்குள்ள எல்லா பாலஸ்தீனிய மக்களையும் அந்த இயக்கம் பிரதிநிதிக்கவில்லை.

“எனவே, காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் முயல்வது பெருந்தவறு.

“அதேநேரம் தீவிரவாதிகளை அங்கிருந்து அகற்றிவிட்டால் அது ஒரு தேவையான நடவடிக்கையாக இருக்கும்,” என்றார் திரு பைடன்.

கடந்த வியாழக்கிழமை அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை இரவு சிபிஎஸ் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

ஹமாஸ் தாக்குதலில் இருந்து இன்னும் மீளாத இஸ்ரேலுக்கு அடுத்த சில நாள்களில் திரு பைடன் செல்லலாம் என்று கூறப்படும் வேளையில் அவரது கருத்து வெளியாகி உள்ளது.

இஸ்ரேலுக்கு வருமாறு கடந்த வார இறுதியில் திரு பைடனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அழைப்பு விடுத்ததாக அவரது நிர்வாகம் தொலைக்காட்சி வழி உறுதிப்படுத்தியது.

இருப்பினும், தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்குச் செல்வது பற்றி திரு பைடன் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதேபோல, காஸாவுக்கு இஸ்ரேல் தனது படைகளைத் தற்காலிகமாக அனுப்ப வேண்டுமா என்பது பற்றியும் அவர் தமது 60 நிமிட பேட்டியில் குறிப்பிடவில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டு காஸா மீதான தனது பிடியை இஸ்ரேல் கைவிட்டது. மறுஆண்டே, அதாவது 2006ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் குழு வென்றது.

ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்தன.

கடந்த 18 ஆண்டு காலமாக ஹமாஸும் அதன் தீவிரவாதப் பிரிவுகளும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. அதன் விளைவாக சிறு சிறு போர் அரங்கேறியது.

கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் காஸாவுக்குள் இஸ்ரேலியப் படைகள் புகுந்தபோதிலும் அங்கு நிலைகொள்ளவில்லை.