கோலாலம்பூர்: செல்வந்தர்களும் வெளிநாட்டவர்களும் சலுகைகளை அனுபவிக்க இயலாத வகையில் கோழி மற்றும் முட்டைகளின் தேவை மற்றும் இருப்புக்கு ஏற்ப அவற்றின் விலையில் அவ்வப்போது மாற்றம் செய்ய அரசாங்கம் விரும்புவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய திரு அன்வார், “கோழி மற்றும் முட்டைகளின் விலைகளில் சலுகை வழங்கும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு முதல் 3.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மானியங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆனால், அந்த மானிய உதவிகளை ஏறக்குறைய 3.5 மில்லியன் வெளிநாட்டவர்களும் நாட்டில் உள்ள செல்வந்தர்களில் 10 விழுக்காட்டினரும் அனுபவிக்க நேர்ந்துள்ளது.
“தற்போதைய சூழலில் கோழி மற்றும் முட்டைகளின் சந்தை விலை உச்சவரம்பு விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. மேலும், தாய்லாந்தில் கோழி மற்றும் முட்டைகளின் விலை மலேசியாவைக் காட்டிலும் குறைவு.
“எனவே விலை நிர்ணய முறையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
“சந்தையில் கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் பற்றாக்குறை எழுந்தால், இருப்பில் இருந்து விநியோகிப்போம். வேளாண், உணவு பாதுகாப்பு அமைச்சிடம் 30 விழுக்காடு கோழி மற்றும் முட்டைகளின் இருப்பு உள்ளது.
“தேவைப்பட்டால் தாய்லாந்திலிருந்தும் அவற்றைத் தருவிக்க உத்தரவிட்டு உள்ளேன்,” என்று திரு அன்வார் தெரிவித்து உள்ளார்.
மலேசியர்களில் 90 விழுக்காட்டினர் இன்னும் பல்வேறு அரசாங்க மானியங்களை அனுபவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


