பிரஸல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் சுவீடன் காற்பந்து ரசிகர்கள் இருவரைச் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 45 வயது துனீசிய துப்பாக்கிக்காரன், சிற்றுண்டியகத்தில் காவல்துறையினரால் சுடப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஐஎஸ் அமைப்பு உறுப்பினராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த ஆடவர் இணையத்தில் பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில், துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்று இருந்தார். திங்கட்கிழமை இரவு மத்திய பிரஸல்ஸில் அந்தத் துப்பாக்கிக்காரன் சுவீடன் நாட்டவர் இருவரைச் சுட்டுக்கொன்றதாகவும் மூன்றாமவரைக் காயப்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, துப்பாக்கிச்சூட்டை ‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று வர்ணித்தார்.
பிரஸல்ஸ் தாக்குதலுக்குக் காரணமானவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் உள்துறை அமைச்சர் அனலிஸ் வெர்லிண்டன் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அந்தத் துப்பாக்கிக்காரனுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்பிருந்ததாக ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுவீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்சன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுவீடனிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் மேம்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
2019 நவம்பரில் பெல்ஜியத்தில் தஞ்சமடைய முடியாமல்போன அந்தத் துப்பாக்கிக்காரன், நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்தார். ஆள்கடத்தல் தொடர்பில் பெல்ஜிய காவல்துறையினர் ஏற்கெனவே அவரைத் தெரிந்து வைத்திருந்ததாக நீதித்துறை அமைச்சர் வின்செண்ட் வேன் குவிக்கன்போர்ன் தெரிவித்தார்.
அந்தத் துப்பாக்கிக்காரனுக்கு உடந்தைகள் இல்லை என்று தீர்மானித்துவிட முடியாது என்று உள்துறை அமைச்சர் வெர்லிண்டன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பெல்ஜியம்-சுவீடன் அணிகளுக்கு இடையேயான யூரோ 2024 தகுதிச்சுற்று காற்பந்து ஆட்டம் தொடங்கவிருந்த வேளையில், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அந்த ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பினார். அந்த ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதையடுத்து, அவரைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் பெல்ஜிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பிரஸல்ஸில் பயங்கரவாத எச்சரிக்கை நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டது.
“காற்பந்து ஆட்டத்தைக் காண பிரஸல்ஸ் வந்திருந்த சுவீடன் நாட்டவரைக் குறிவைத்து அந்தச் சந்தேக ஆடவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்,” என்று பெல்ஜியப் பிரதமர் டி குரூ சொன்னார்.
பிரஸல்ஸில் காவல்துறையினரின் எண்ணிக்கையை பெல்ஜியம் அதிகரித்துள்ளது. விழிப்புடன் இருக்குமாறும் அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படியும் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

