மருத்துவமனை தாக்குதல்: உலகம் அதிர்ச்சி, அஞ்சலி

காஸா சிட்டி: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காஸா சிட்டியில் செயல்பட்ட மருத்துவமனை தாக்கப்பட்டு 500 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தகவலைக் கேட்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

உலகத் தலைவர்கள் அதிர்ச்சி, கோபம், அனுதாபச் செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள்.

ஹமாஸ்-இஸ்ரேல் போர் பத்து நாட்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தார்.

அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.

இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஏராளமான மக்கள் காயம் அடைந்துகிடப்பதாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதை இஸ்ரேல் ராணுவம் மறுத்தது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் பாய்ச்சிய எறிபடை தவறுதலாக மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் கூறுவதை நிராகரித்துவிட்டன.

காஸா சிட்டியில் உள்ள அஹ்லி அராப் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அந்த பாடுபாதகத் தாக்குதலை உலகத் தலைவர்கள் அனைவருமே கண்டித்தனர்.

அது பற்றி கருத்து கூறிய ஈரான் உள்ளிட்ட நாடுகள், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவும் இதர நாடுகளும் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று தெரிவித்தன.

இஸ்ரேல் புறப்பட்டதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மருத்துவமனை தாக்குதலைக் கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைவதாக அதில் அதிபர் கூறினார்.

அதன் தொடர்பில் மத்திய கிழக்கு தலைவர்களுடன் தான் பேசி இருப்பதாகவும் உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும்படி அமெரிக்கப் தேசிய பாதுகாப்புக் குழுவுக்குத் தான் உத்தரவிட்டு இருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

“அமெரிக்கா குடிமக்களைக் காப்பதில் உறுதி பூண்டுள்ளது. மருத்துவமனை தாக்குதலில் மாண்ட, காயமடைந்த நோயாளிகள், ஊழியர்கள், அப்பாவி மக்களை நினைத்து அமெரிக்கா கவலை அடைகிறது.

“இறந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று அறிக்கை தெரிவித்தது.

மருத்துவமனை தாக்குதலை அடுத்து ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தரப்பு தான் ஆதிக்கம் செலுத்தும் லெபனான் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கோரிக்கை விடுத்தது.

லெபனான் முழுவதிலும் கல்வி நிலையங்கள் புதன்கிழமை மூடப்பட்டன. எகிப்து, ஜோர்தான் சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தின.

அந்தப் போர் குற்றத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்று ஜோர்தான் தெரிவித்தது.

“அனைத்துலக சட்டங்கள், நியதிகளை மீறி இஸ்ரேல் செயல்பட்டு இருக்கிறது. மருத்துவமனை மரணங்களுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு,” என்று சவூதி அரேபியா கூறியது.

இதை எகிப்து உள்ளிட்ட பல அரபு அரசுகள் அங்கீகரித்தன.

மருத்துவமனை தாக்குதல் பற்றி கருத்து கூறிய இஸ்ரேல் நட்பு நாடுகள், தாங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டதாகத் தெரிவித்தன. இருந்தாலும் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதில் அவை அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

“குடிமக்களைக் காப்பதுதான் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்,” என்று பிரிட்டன் கூறியது.

“என்ன நிகழ்ந்தது என்பதைக் கண்டறியவும் காஸாவில் மக்களைக் காக்கவும் நேச நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் செயல்படும்,” என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவெர்லி கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, “காஸா செய்தி பதைபதைக்கச் செய்கிறது. அத்தாக்குதலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அனைத்துலக சட்டம் அனைத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.

இதனிடையே, மருத்துவமனை தாக்குதல் பற்றி கருத்து கூறிய ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டெர்ஸ், தான் அதிர்ச்சி அடைந்து திடுக்கிட்டதாகக் கூறினார்.

சீனாவின் வடகடல் வழித்தட கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஹமாஸ் அமைப்பு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதற்காக மருத்துவமனை மேல் குண்டுபோட்டு பாலஸ்தின மக்களை இப்படி ஒட்டுமொத்தமாகத் தாக்குவதை நியாயப்படுத்த இயலாது என்று அவர் கண்டித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!