கோலாலம்பூர்: தொடங்கி ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், கடந்த வாரம் திடீரென அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்தியது மைஏர்லைன் விமானச் சேவை நிறுவனம்.
இதனால் பயணிகள் பலரும் பாதிப்படைந்தனர். நிதி நெருக்கடியும் பங்குதாரர்கள் மறுகட்டமைப்பும் காரணங்கள் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இது குறித்து மேலும் அறிவிக்கும் வரை அதன் நடவடிக்கைகள் யாவும் முடக்கத்தில் உள்ளன.
அந்தப் பிரச்சினை முடிவடையாத நேரத்தில் இப்போது அதன் தோற்றுனர் நிதி சம்பந்தமான குற்றங்களில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை புதன்கிழமை (அக்.18) அறிவித்தது.
புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் ரம்லி யூசுப் இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
மைஏர்லைன் தோற்றுனரும் பெரும்பான்மை பங்குதாரருமாகிய கோ ஹுவான் ஹுவா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நான்கு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும் காவல் துறையின் ரம்லி தெரிவித்தார்.
பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் (2001) என்ற பிரிவின் கீழ் கோ விசாரிக்கப்படுவார் என்று ரம்லி கூறினார்.
பெரும்பாலும் மலேசியாவின் உள்ளூர் நகரங்களுக்கு மைஏர்லைன் நிறுவனத்தின் 9 விமானங்களும் பயன்பட்டன. நிர்வாகக் கூட்டமைப்பு, பங்குதாரர் சீரமைப்பு, மறுமுதலீடு போன்ற பலவற்றைப் பரிசீலனை செய்து வேறு வழியில்லாமல் நிறுவனத்தின் வர்த்தகத்தை நிறுத்திவைத்துள்ளதாக அதன் இயக்குநர்கள் கூறினர்.