பாலஸ்தீன வெஸ்ட் பேங்க் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களில் இருவர் பதின்ம வயதினர் என்றும் பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘வாஃபா’ கூறியுள்ளது.
அகதி முகாம் ஒன்றில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் 14 வயது சிறுவன் உயிரிழந்துவிட்டார். அதேபோல் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய 16 வயது இளைஞரும் கடுமையான காயங்களால் பின்னர் உயிரிழந்தார்.
பட்ரஸ் என்ற ஊருக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவி மற்றொரு இளைஞனையும் சுட்டுக் கொன்றதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நிலவழித் தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
பாலஸ்தீன தேசிய ஆணையம் வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைந்துள்ளது. இது ஹமாஸ் எதிராளிகளான ஃபத்தா மற்றும் 87 வயது பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ் ஆகியோரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

