இந்தோனீசியாவில் தேர்தல் பருவம் தொடங்கியது

இந்தோனீசியாவில் தேர்தல் பருவம் தொடங்கியது

2 mins read
3b90880c-be7b-4b6d-a40e-008f21a2b4f0
ஜகார்த்தா முன்னாள் ஆளுநர் அனிஸ் பாஸ்வேடானும் அவருடன் சேர்ந்து போட்டியிடும் முகைமின் இஸ்கந்தரும் தேர்தல் ஆணையத்துக்கு வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முதல் சில வேட்பாளர்கள் வியாழக்கிழமை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

மத்திய ஜகார்த்தாவில் உள்ள இந்தோனீசிய பொதுத் தேர்தல் ஆணையத்துக்கு வெளியே கட்சிக்கொடிகளுடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடலென திரண்டிருந்ததால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களின் பெயர்களை முழக்கமிட்ட கூட்டத்தினர், தேர்தலில் அவர்கள் வெற்றியடைய பிரார்த்தனை செய்ததுடன் ஒலிபெருக்கிகளில் இருந்து காதைக் கிழிக்கும்படி வெளிவந்த இசைக்கு ஆடி மகிழ்ந்தனர்.

ஆதரவாளர்கள் கூடுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு இட்டுச்செல்லும் சாலைகள் மூடப்பட்டிருந்தன.

ஜகார்த்தா முன்னாள் ஆளுநர் அனிஸ் பாஸ்வேடானும் அவருடன் சேர்ந்து போட்டியிடும் தேசிய விழிப்புக் கட்சித் தலைவர் முகைமின் இஸ்கந்தரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த முதல் இருவர்.

வெள்ளை நிற ஜீப் வாகனத்தில் 12க்கும் அதிகமான பாதுகாவல் அதிகாரிகளுடன் காலை 9.45 மணிக்கு தேர்தல் ஆணையத்துக்கு வந்துசேர்ந்த அவர்கள், ஆதரவாளர்களுடன் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டு கைகுலுக்கினர்.

பின்னர், ஆளும் மக்களாட்சிக் கட்சியை (போராட்டம்) சேர்ந்த மத்திய ஜாவா முன்னாள் ஆளுநர் கஞ்சார் பிரனோவோவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மஹ்ஃபுத் எம்டியும் பிற்பகல் 12.40 மணியளவில் திறந்தவெளி லாரியில் தேர்தல் ஆணையத்துக்கு வந்துசேர்ந்தனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பதிவுமுறை அக்டோபர் 25ஆம் தேதி முடிவுறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். இதில் 204 மில்லியனுக்கும் அதிகமான இந்தோனீசியர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுமுறை சுமுகமாக நடந்தேறுவதை உறுதிசெய்ய 2,000க்கும் அதிகமான அதிகாரிகள் வியாழக்கிழமை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்