ஜப்பானில் 2026ல் ஓட்டுநர் இல்லா வாகனம்: ஹோண்டா, ஜிஎம், குரூஸ் திட்டம்

ஜப்பானில் 2026ல் ஓட்டுநர் இல்லா வாகனம்: ஹோண்டா, ஜிஎம், குரூஸ் திட்டம்

1 mins read
d23c58d5-190e-45b5-b8c1-5772a9f1b137
ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் ஜிஎம் போல்ட் மின்வாகனம். ஜிஎம் நிறுவனத்தின் குரூஸ் தயாரித்த இவ்வாகனம் 2017ல் ஊடகங்களுக்கென அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜெனரல் மோட்டோர்ஸ் (ஜிஎம்) மற்றும் குரூஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஓட்டுநர் இல்லாத வாகனச் சேவையை 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதிகாரத்துவ ஒப்புதல் கிடைத்ததும், அந்த மூன்று நிறுவனங்களும் 2024ஆம் ஆண்டு முதற்பாதியில் கூட்டு முயற்சியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கின்றன. இந்தச் செயல்திட்டத்தை ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா, நிதி விவரங்கள் எதையும் வெளியிடாமல் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்தக் கூட்டு முயற்சியின் வழி, தற்சார்பு வாகன வர்த்தகத்தை ஜப்பானில் வணிகமயமாக்குவதை இந்த மூன்று நிறுவனங்களும் எதிர்பார்ப்பதாக குரூஸ் நிறுவனத் தலைமை அதிகாரி கைலி வோட் கூறினார். அமெரிக்காவில் நான்கு நகரங்களில் குரூஸ் நிறுவனம் ஏற்கெனவே அவ்வாறு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தி குரூஸ் ஒரிஜின் எனப்படும் (ஓட்னர் இல்லா தற்சார்பு) வாகனம், ஜப்பானின் மத்தியத் தோக்கியோவில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சில ஒரிஜின் வாகனங்களுடன் தொடங்கி பின்னர் 500 வாகனங்கள் வரை செயல்படவிருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களது திறன்பேசிகளில் வாகனங்களை முன்பதிவு செய்து கட்டணங்களைச் செலுத்தலாம்.