வாஷிங்டன்: இஸ்ரேல், எந்த நேரத்திலும் காஸாவுக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அந்நாட்டுக்கு உதவ அமெரிக்கர்கள் பில்லியன் கணக்கான டாலர் நிதியளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேல் தற்காப்புப் படைத் தலைவர் தனது துருப்புகளுக்கு காஸாவுக்குள் நுழைய தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை பின்னேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களிடம் திரு பைடன் உரையாற்றினார். இது, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்கும் உக்ரேனின் முயற்சிகளை பற்றியும் அவர் பேசினார்.
இஸ்ரேலின் ஜனநாயகத்தை ஹமாஸ் அழிக்க முயற்சி செய்கிறது என்றார் அவர்.
சென்ற புதன்கிழமை இஸ்ரேலுக்கு எட்டு மணி நேரம் பயணம் மேற்கொண்ட அதிபர் பைடன், “உணவு, மருந்து, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருள்களை அவசரமாக வழங்க வேண்டும்,” என்றார்.
“அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதை புறக்கணிக்க முடியாது. அவர்கள் அமைதியையும் வாய்ப்புகளையும் பெற விரும்புகின்றனர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொள்ளப்போவதாக திரு பைடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஒருவர், அந்த நிதியுதவியின் மதிப்பு 14 பில்லியன் யுஎஸ் டாலர் என்று கூறினார்.
“இந்தப் பணம், இஸ்ரேலின் ராணுவ ஆற்றலை வலுப்படுத்தும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு இஸ்ரேல் போன்ற ‘முக்கியமான பங்காளிகளை’ ஆதரிப்பது அவசியம். இது ஒரு விவேகமான முதலீடு, இது, அமெரிக்காவின் பல தலைமுறைகளின் பாதுகாப்புக்கு உதவும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தலைமைத்துவம் உலகை ஒருங்கிணைத்து வைத்துள்ளது என்றும் தமது உரையில் பைடன் குறிப்பிட்டார்.
ஹமாஸ் ஆட்சி நடத்தி வரும் கடலோர காஸா வட்டாரத்தை இஸ்ரேலிய ராணுவம் தரை வழியாக நெருங்கி வருகிறது. காஸா எல்லையில் படைகளையும் ராணுவச் சாதனங்களையும் இஸ்ரேல் குவித்து வைத்துள்ளது.
“நீங்கள் காஸாவை இப்போது தூரத்திலிருந்து பார்க்கிறீர்கள். விரைவில் காஸாவில் உள்ளேயிருந்து பார்க்கப் போகிறீர்கள். அதற்கான கட்டளை விரைவில் பிறப்பிக்கப்படும்,” என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவ் காலன்ட் காஸா எல்லையில் உள்ள படைகளிடம் தெரிவித்தார்.
இம்மாதம் 7ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கியதில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடியாக காசா மீது ஏராளமான குண்டுகளை வீசி கட்டடங்களைத் தகர்த்தது. இதில் 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
திரு பைடன் தனது இஸ்ரேலியப் பயணத்தின் ஒரு பகுதியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இஸ்ரேலும் எகிப்தும் எல்லையைக் கடந்து 20 டிரக் நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதை அனுமதிக்க சம்மதித்துள்ளன என்று அதிபர் பைடன் தெரிவித்தார்.

