ஒட்டாவா: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பூசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவிலிருந்து 41 அரசதந்திரிகளை கனடா அரசாங்கம் மீட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா, இரண்டு வாரங்களுக்கு முன்பு தமது நாட்டில் உள்ள டஜன் கணக்கான கனடிய அரசதந்திரிகளை மீட்டுக்கொள்ளும்படி கனடாவுக்கு உத்தரவிட்டது.
அப்படி அவர்கள் உத்தரவை மீறி இந்தியாவில் தங்கி இருந்தால் அவர்களின் அரசதந்திரத் தகுதி நீக்கப்படும் என்று இந்தியா எச்சரித்திருந்தது.
ஆனால் கனடிய அதிகாரிகள், இதனை அனைத்துலகச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று சாடியிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவில் வசித்துவந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்தக் கொலையில் இந்திய புலனாய்வு அமைப்பிற்குத் தொடர்பிருக்கிறது என்று கனடா குற்றம்சாட்டியது.
அத்துடன் இந்திய உயர் அதிகாரிகளை வெளியேறவும் அது உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக இந்தியா, 41 கனடிய அரசதந்திரிகளை வெளியேறும்படி கூறியது.
இந்த நிலையில் வியாழக்கிழமை பேசிய கனடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, பல கனடிய அரசந்திரிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவைவிட்டு வெளியேறியிருப்பதை உறுதி செய்தார்.
இந்தியாவில் உள்ள 21 தூதரக அதிகாரிகளைத் தவிர மற்றவர்களுக்கு அக்டோபர் 20ஆம் தேதி அரசதந்திரத் தகுதி விலக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் இதற்கு முன் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கெடு முடிவதற்குள் கனடிய அரசதந்திரிகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
“எஞ்சிய 21 அரசதந்திரிகள் இந்தியாவில் உள்ளனர். பெரும்பாலான அதிகாரிகள் மீட்டுக்கொள்ளப்பட்டதால் ஆள்பற்றாக்குறை காரணமாக கனடா அரசாங்கம் அதன் தூதரகச் சேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று அமைச்சர் ஜோலி தெரிவித்தார். இந்தியா, கனடா இடையிலான பூசல் நீடிக்கிறது.

