சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அவரின் குடும்பத்தினரும் ஆடம்பரப் பொருள்களுக்காக ஆண்டுதோறும் மில்லியன்கணக்கில் செலவிடுவதாகத் தென்கொரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆடம்பரக் கைப்பைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றுக்குச் செலவிடும் அவர்கள் அதைப் பொதுவெளியில் பறைசாற்றுவதற்குத் தயங்குவதில்லை என்றார் அவர்.
தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சில் பணிபுரியும் அந்த அதிகாரி தம் பெயரை வெளியிட விரும்பவில்லை.
தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் 2006ஆம் ஆண்டில், ஆடம்பரப் பொருள்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது.
இருப்பினும் வடகொரியத் தலைவரின் குடும்பத்தினர் அவற்றை வாங்குவதை நிறுத்தவில்லை என்று அச்செய்தி குறிப்பிட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது திரு கிம்மின் குடும்பத்தினர் குறைவான எண்ணிக்கையில் ஆடம்பரப் பொருள்களை வாங்கியதாகவும் 2022ன் பிற்பாதியிலிருந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் உள்ள விமானத் தயாரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டபோது, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜுங், புகழ்பெற்ற பிரெஞ்சு நிறுவனமான கிறிஸ்டியன் டியோர் தயாரித்த கைப்பையுடன் காணப்பட்டார்.