வெள்ளிக்கிழமை முதல் ஆசியானில் தேர்ச்சி பெற்ற வழக்குரைஞர்கள் இந்த வட்டாரத்தில் சட்டப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புதிய இணைய முகப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உட்பட்ட ஆசியான் நாட்டில் சட்டச் சேவை வழங்கும் வழக்குரைஞர்கள் நேரடி சட்டப் பயிற்சி வாய்ப்புகளுக்கு பதிவுசெய்துகொள்ள, இந்த இணைய முகப்புச் சேவையை பயன்படுத்தலாம்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சட்ட நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பயிற்சி வாய்ப்புகள் பற்றிய விவரங்களை அந்த இணைய முகப்பில் பதிவேற்றியுள்ளன. மேலும் பல சட்ட நிறுவனங்கள் இந்த முகப்பில் இணைய விரும்பம் தெரிவித்துள்ளன.
இளம் வழக்குரைஞர்களிடம் உறவுகளை வலுப்படுத்தி சட்டச் சேவையின் தரத்தை உயர்த்த ஆசியான் சட்டத்துறை சங்கம் (ஏசியென் லா அசொசியஷேன்) பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அவற்றில் ஒன்றுதான் இவ்வித மெய்நிகர் பயிற்சி சந்தைகள் என்று ஒரு வட்டார நிபுணத்துவ அமைப்பான அச்சங்கம் வியாழக்கிழமை (அக்19) தெரிவித்தது.
இந்த முயற்சி, வெள்ளிக்கிழமை (அக்.20) ஆசியான் சட்டத்துறை சங்கத்தின் 14வது பொதுக் கூட்டத்தில் தொடங்கிவைக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் வெள்ளி முதல் சனிக்கிழமை வரை (அக்.21) கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் இந்தச் சேவை வழங்கப்படும். உறுப்பினர்கள் மெய்நிகர் பயிற்சிகளில் பங்கேற்கலாம். சட்ட நிறுவனங்களின் தேவைகளுக்கும் சேவைகளுக்கும் ஏற்ப கட்டணத்துடன் பணியமர்த்தப்படும் வாய்ப்புகளும் நேரடியாக பயிற்சிகளில் பங்கேற்கும் செயல்முறைகளும் உள்ளது. ஆசியான் சட்ட சங்கத்துக்கு சிங்கப்பூரில் சுமார் 350 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆசிய சட்டத்துறை சங்க உறுப்பினர்களின் முக்கிய தகுதியாக வழக்குரைஞர்கள் பரிசோதிக்கப்பட்டு, நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதியான லீ செயு கின், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த அண்மையப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.