அதிபர் பைடன்: சவூதி-இஸ்ரேல் உறவைக் கெடுக்கவே ஹமாஸ் தாக்கியது

2 mins read
c7a0c096-87a3-4ab3-af01-3554730442ec
சவூதி-இஸ்ரேல் உறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் இருக்கின்றன. என்றாலும் அதற்குக் காலம் பிடிக்கும் என்று அதிபர் பைடன் குறிப்பிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சவூதி அரேபியா விரும்புகிறது.

இந்நிலையில், அதைக் கெடுக்கவே ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 1,400 பேரைக் கொன்றுவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேலை அங்கீகரிக்க சவூதி அரேபியா விரும்புகிறது என்பதை அதிபர் சுட்டிக் காட்டினார்.

வாஷிங்டனில் நிதித் திரட்டு இயக்கம் ஒன்றில் அதிபர் பேசினார்.

அமெரிக்காவின் முந்தைய அதிபர் டிரம்ப் ஆட்சியின்போது சவூதி அரேபியா இஸ்ரேலுடன் அரசதந்திர உறவை ஏற்படுத்திக்கொண்ட ஐக்கிய அரசு சிற்றரசுகள், பஹ்ரான் ஆகியவற்றுக்குத் தன் வாழ்த்துகளை 2020ல் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் சவூதி அரேபியா ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரசு சிற்றரசுகள், பஹ்ரான் ஆகியவற்றுக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டாலும் சவூதி இன்னமும் உறவுகளைத் தோற்றுவிக்கவில்லை.

பாலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சவூதி வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கடந்த ஜூன் மாதம் சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

சவூதி அரேபியாவோடும் இதர அரபு நாடுகளோடும் உறவை வழமைப்படுத்துவது அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அந்தப் பயணம் பற்றி முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர், தம் பயணத்தின் மூலம் உடனடியாகப் பெரிய முன்னேற்றம் எதையும் சாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர் பிளிங்கன் அக்டோபர் 8 ஆம் தேதி சிஎன்என் நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார்.

இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நல்ல உறவு ஏற்படுவதைத் தடுக்கவே ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிபர் பைடன், சிபிஎஸ் 60 மினிட்ஸ் என்ற அமைப்பிற்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார்.

சவூதி-இஸ்ரேல் உறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் இருக்கின்றன. என்றாலும் அதற்குக் காலம் பிடிக்கும் என்று அதிபர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் ஹமாஸ்- இஸ்ரேல் போர் இப்போதைக்கு ஒடுங்குவதாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்