தொண்டூழியர்களுக்கு பாதுகாப்பாக ஸிக்கா தொற்று ஏற்படுத்தும் விஞ்ஞானிகள்

தொண்டூழியர்களுக்கு பாதுகாப்பாக ஸிக்கா தொற்று ஏற்படுத்தும் விஞ்ஞானிகள்

1 mins read
af8bffef-2257-42e4-9bfe-e085464d10d4
கொசுக்களால் பரவும் ஸிக்கா தொற்று மிதமாகவும் அறிகுறி இல்லாமலும் இருக்கும். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சிகாகோ: அமெரிக்காவின் அறிவியல் ஆய்வாளர்கள் முதல் முறையாக தொண்டூழியர்களுக்கு பாதுகாப்பான வகையில் ஸிக்கா கிருமித்தொற்றை ஏற்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது, அந்நோயைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் தடுப்பூசி உருவாக்கவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கட்டுப்படுத்தப்பட்ட மனிதத் தொற்று மாதிரி’ என்ற ஆய்வு முன்பு சர்ச்சையை கிளப்பியது. ஸிக்கா கிருமியால் ஆய்வில் பங்கேற்கும் தொண்டூழியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பலர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இந்த மாதிரி ஆய்வு பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளன. ஜான்ஸ் ஹாப்கின்சின் புளூம்பெர்க் பொதுச் சுகாதாரப் பள்ளி இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

ஸிக்கா தொற்றுநோய், கொசு மூலம் பரவுகிறது. இது, பொதுவாக லேசானதாக அல்லது நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்.

2015, 2016ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்தத் தொற்றுநோய் பரவியபோது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவில் உள்ள சிசுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதும் சிறிய தலை மற்றும் மூளையுடன் பிறக்கும் ‘microcephaly’ என்ற பிறப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்பதும் தெரியவந்தது.

இதற்கு தடுப்பூசியோ சிகிச்சைகளோ இல்லை. புதிய மருந்துகள் சோதிக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்காவில் நோய்த்தொற்று முடிவுக்கு வந்தது. உலகளவில் ஸிக்கா தொற்றும் குறைந்துவிட்டது. 2022ல் அவ்வட்டாரத்தில் 40,000 பேர் ஸிக்கா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்