பிரிட்டனிலும் பிரான்சிலும் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரிப்பு

பிரிட்டனிலும் பிரான்சிலும் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரிப்பு

1 mins read
2f9a8bf5-26cc-4543-8a9f-47e3fa891098
ஜெர்மானியத் தலைநகர் பெர்லினில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு வெளியே காவல் காக்கும் அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டனில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக லண்டன் மாநகரக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் 18ஆம் தேதிவரை லண்டனின் பல பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக 218 வெறுப்புணர்வுக் குற்றங்கள் பதிவானதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 15ஆக இருந்தது.

அதேவேளையில், முஸ்லிம்களுக்கு எதிராக 101 வெறுப்புணர்வுச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது.

இதன் தொடர்பில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது.

இந்நிலையில், ஐரோப்பாவிலேயே ஆகப்பெரிய யூதர் சமூகத்தைக் கொண்டுள்ள பிரான்சில், யூதர்களுக்கு எதிராக 320க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகின. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய முதல் 10 நாள்களில் பிரான்சில் 180க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் யூதர் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், சமூக நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

தாங்கள் விழிப்புடன் இருப்பதாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியில் உள்ள யூதர் சமூகங்கள் கூறியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்போர்குற்றம்