பேங்காக்: சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ர மருத்துவமனையில் கூடுதல் காலம் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது மருத்துவ சிகிச்சையை காவல்துறை மருத்துவமனையில் தொடர்வார் என்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது சிறைக்கு வெளியே சிகிச்சை பெற முதலில் அனுமதிக்கப்பட்ட 60 நாட்களுக்கு மேலாகும்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுக்கப்பட்ட முடிவு என சிறைத் திருத்த அலுவலக தலைமை இயக்குநர் சகாக்கன் பெட்நாரின் தெரிவித்தார். திரு தக்சினுக்கு ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினை, மற்ற வயது மூப்பு தொடர்பான நோய்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதாக சகாக்கன் பெட்நாரின் தெரிவித்தார்.
சிறைத் துறை அலுவலக அனுமதி, மருத்துவ பரிந்துரை, அதற்கான ஆதாரங்கள் ஆகியவை நீதித் துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளருக்கு அவரின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏஷியா நியூஸ் நெட்வொர்க் செய்தித் தகவல் கூறுகிறது.
திரு தக்சின் ராணுவப் புரட்சியில் 2006ஆம் ஆண்டு பதவியிழந்தார். அவர் 15 ஆண்டு வெளிநாட்டு வாசத்திற்குப் பின் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தமக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்ற நாடு திரும்பியது நினைவுகூரத்தக்கது.

