வாஷிங்டன்: காஸா மீதான தரைவழி படையெடுப்பை தாமதிக்குமாறு பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் அதிகமான மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீனர்களைச் சென்று சேருவதற்கும் பிணை பிடிக்கப்பட்டோரை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த தாமதம் கைகொடுக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக காஸாவுக்கு அனுப்பினால் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தக்கூடும்.
எனவே அதற்குப் படைகளைத் தயார் செய்ய நேரம் தேவைப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹமாஸைத் துடைத்தொழிக்கும் நோக்கில் இஸ்ரேல் மேற்கொண்டு இருக்கும் தரைவழித் தாக்குதலை அமெரிக்கா இன்னும் ஆதரிக்கிறது. அதனால், தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிடம் எந்த ஒரு கோரிக்கையையும் பைடன் நிர்வாகம் முன்வைக்கவில்லை.
தாக்குதலின் தீவிரப் போக்கை தாமதிக்கலாம் என்ற யோசனையை மட்டும் அது இஸ்ரேலிடம் தெரிவித்து உள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி இரு அமெரிக்கப் பெண்களை ஹமாஸ் போராளிகள் விடுவித்ததைத் தொடர்ந்து, பிணை பிடிக்கப்பட்டு உள்ள மேலும் 212 பேரை ஹமாசின் பிடியில் இருந்து விடுவிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
எனவே, அந்த நடவடிக்கைக்கு இடையூறு நேராவண்ணம் காஸா மீதான படையெடுப்பை இப்போதைக்குத் தீவிரப்படுத்த வேண்டாம் என இஸ்ரேலிடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் ஒரு பகுதியாக, அதிபர் பைடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் தொலைபேசி வழி உரையாடி, ஆக அண்மைய நிலவரம் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தொடர்ந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் தலைவர்களிடமும் திரு பைடன் பேசியதாக அது கூறியது.
மனிதாபிமான உதவிகளுடன் இரண்டு வாகன வரிசைகள் சனிக்கிழமை காஸாவுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற மேலும் அதிகம் தேவைப்படும் உதவிகள் தொடர்ந்து அங்கு செல்லக்கூடும் என்பதை அமெரிக்க, இஸ்ரேலிய தலைவர்கள் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

