தோக்கியோ: வெளிநாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூப் கலைஞர் ஒருவர் ஜப்பானில் கட்டணமின்றி பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஃபிஃபிடியாஸ் என்றழைக்கப்படும் அந்தக் கலைஞருக்கு யூடியூபில் சுமார் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் ஜப்பானின் சில ரயில், பேருந்துச் சேவைகளைக் கட்டணமின்றி பயன்படுத்தியதை அவர் கடந்த வாரயிறுதியில் காணொளியில் பதிவிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
உடல்நலம் குன்றியதுபோல் நடித்து அதிவேக ரயிலின் கழிவறையில் ஒளிந்துகொண்டு பின்னர் வேறு ரயிலுக்கு மாறிக்கொள்வது காணொளியில் பதிவானது. அதேபோல் ஹோட்டல் ஒன்றில் இலவசமாகக் காலை உணவருந்த அங்கு வசிப்பவர்போல் நடிப்பது மற்றொரு காணொளியில் பதிவானது.
ஃபிஃபிடியாஸ், 1.7 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட மற்றொரு யூடியூப் பிரபலமான நைட் ஸ்கேப் என்பவரைப் போல் தென்படும் ஒருவர் உட்பட நால்வர், நுழைவுச்சீட்டுகளுக்குக் கட்டணம் செலுத்தப் பிச்சை எடுப்பதும் காணொளிகளில் பதிவானது.
அந்தக் காணொளிகள் எப்போது பதிவு செய்யப்பட்டன, சம்பந்தப்பட்ட நால்வரும் ஜப்பானில் இருக்கின்றனரா போன்ற விவரங்கள் தெரியவில்லை. நால்வரில் மூவர் ஆண்கள், ஒருவர் பெண்.
காணொளிகளை ஆராய்ந்த பிறகு இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுப்பதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று ஜப்பானின் ரயில் நிறுவனமான ஜேஆர் கியூஷூ தெரிவித்தது.
“இந்த விவகாரம் பற்றி எங்களுக்குத் தெரியும். இதன் தொடர்பிலான தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.