இஸ்‌ரேல்: இடைவிடாத் தாக்குதல்களுக்குத் தயாராகிறோம்

இஸ்‌ரேல்: இடைவிடாத் தாக்குதல்களுக்குத் தயாராகிறோம்

3 mins read
d4b053cc-4daf-4bd2-a998-3a87787167f1
தென்இஸ்‌ரேலில் இஸ்ரேலியப் பீரங்கிப் படையினர். - படம்: நியூயார்க் டைம்ஸ்
multi-img1 of 2

காஸா: ஹமாஸ் அமைப்பை வேரோடு சாய்க்க, இடைவிடாத் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை அதிகம் உள்ள காஸாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்களைக் குறைக்க எண்ணமில்லை என்று இஸ்‌ரேலிய ராணுவத் தலைவர் லெஃப்டிணன்ட் ஜெனரல் ஹேர்சி ஹலேவி கூறினார்.

தரைவழித் தாக்குதல்களை நடத்தவும் இஸ்‌ரேலிய ராணுவம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“ஹமாஸ் அமைப்பை வேரோடு சாய்ப்பதே எங்கள் இலக்கு. இதற்குத் தொடர் தாக்குதல்கள்தான் வழி. ஹமாஸ் அமைப்புக்கு அனைத்து வகையிலும் சேதம் விளைவிக்க வேண்டும். தென்இஸ்ரேலிலிருந்து தரைவழி தாக்குதல்களை நடத்த தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.

திங்கட்கிழமையன்று காஸா மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதே சமயம், ஹமாஸ் போராளிகளைச் சுற்றி வளைத்து இஸ்‌ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல இஸ்‌ரேலிய ராணுவம் தயாராகவும் முனைப்புடனும் இருப்பதாக இஸ்‌ரேலிய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதற்கான உத்தரவுக்காக காத்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக காஸாவில் 5,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்‌ரேலுக்கு உரிமை உண்டு என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளபோதிலும் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று இஸ்‌ரேலிடம் அது தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் பிணை பிடிக்கப்பட்டோரின் விடுதலைக்கு அமெரிக்கா முன்னுரிமை தருகிறது.

இஸ்‌ரேல்-ஹமாஸ் சண்டை நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு அது பற்றி பேசலாம் எனப் பதிலளித்தார்.

இதற்கிடையே, பாலஸ்தீனிய மக்களின் பாதுகாப்பு, உயிரைப் பற்றி கவலைப்படாமல் தாக்குதல்களை நடத்தினால் அது இஸ்‌ரேலுக்குப் பாதகமாக முடியும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

“காஸா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மாண்டுவிட்டனர். அவர்களில் பலர் சிறுவர்கள். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

“காஸாவில் உணவு, தண்ணீர், மின்சார விநியோகத்தைத் துண்டிக்க இஸ்‌ரேலிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இது மனிதாபிமான நெருக்கடிநிலையை ஏற்படுத்துவதுடன் இஸ்ரேலுக்கு எதிராக இளம் பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் பகைமை உணர்வை மோசமாக்கக்கூடும். இது இஸ்‌ரேலின் எதிரிகளுக்குச் சாதகமாக அமையக்கூடும். அதுமட்டுமல்லாது மத்திய கிழக்கில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட நீண்டகால முயற்சிகள் வீணாகிவிடும்,” என்று திரு ஒபாமா கூறினார்.

அதே சமயம், இஸ்‌ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதியன்று பிணை பிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோரில் இரண்டு இஸ்‌ரேலிய மூதாட்டிகளை விடுவித்துள்ளதாக ஹமாஸ் திங்கட்கிழமையன்று கூறியது.

“அவர்கள் இருவரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவித்துள்ளோம். அவர்களுக்கு உடல்நலம் சரியில்லை,” என்று ஹமாஸ் அமைப்பில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்த இரு மூதாட்டிகளின் கணவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, இஸ்‌ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் மோசமடைந்து சண்டையால் தென்லெபனானில் ஏறத்தாழ 20,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இஸ்‌ரேலின் வடக்குப் பகுதியிலிருந்து இஸ்‌ரேலியர்கள் பலரை அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

இஸ்‌ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்‌ரேலிய ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்