கொழும்பு: இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு விசா இல்லாத சுற்றுப்பயணத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இலங்கைக்குள் நுழைய இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தோருக்கு விசா தேவைப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, சீனா, மலேசியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகள் அவை.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முன்னோடித் திட்டம் இது என்றும் சோதனை அடிப்படையில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு இது செயல்படுத்தப்படும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை அண்மைய சில ஆண்டுகளாகவே பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அரசாங்கம் நொடித்துவிட்டதாக இலங்கை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானதாக மாறியது.
இந்த எதிர்பாராத நெருக்கடிக்கு ஆட்சியாளர்களின் தவறான பொருளியல் கொள்கைகள் காரணம் என்று கூறப்பட்டது.
பொருளியல் நெருக்கடி காரணமாக மக்கள் உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட போதுமான அளவுக்கு இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் அகதிகளாக வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் சிக்கலில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கவனம் செலுத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கிறது. அதை வளப்படுத்த அவ்வப்போது பல முயற்சிகளை அந்த நாடு செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது ஏழு நாடுகளுக்கான விசா கட்டுப்பாட்டை இலங்கை தளர்த்தி உள்ளது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.