ஜோகூர் பாரு: மலேசியாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி எவரெஸ்ட் மலையடிவார முகாமை அடைந்துள்ளார்.
கடந்த மாதம் எட்டு நாள் கடுமையான மலையேறும் பயணத்துக்குப் பிறகு கடல் மட்டத்துக்கு 5,364 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் மலையடிவார முகாமை திருவாட்டி சுசி ஒலிவர் அடைந்தார்.
திருவாட்டி சுசியை அவரது நண்பர்கள் இரும்புப் பெண்மணி என்று அழைக்கின்றனர்.
தமது வாழ்நாளில் எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று தாம் வைத்திருந்த இலக்குப் பட்டியலில் எவரெஸ்ட் மலையடிவார முகாமை அடைவதும் ஒன்றாக இருந்தது என்றார் திருவாட்டி சுசி.
இந்த வயதில் இந்த இலக்கை அடைந்திருப்பது உணர்வுபூர்வமானது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
“மலையேறிகளில் எனக்குத்தான் வயது அதிகம். எனவே, அனைவரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். மலையடிவார முகாமிலிருந்து திரும்பும் வழியில் ஆக இளம் மலையேறியைச் சந்தித்தார். அவர் ஒரு பதின்மவயது இளைஞர்,” என்று திருவாட்டி சுசி தெரிவித்தார்.
நேப்பாளத்தில் 15 நாள் மலையேறும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள திருவாட்டி சுசி மலேசியாவில் கடுமையான பயிற்சி மேற்கொண்டார்.
கடந்த மே மாதத்தில் அவர் சாபாவில் உள்ள கினபாலு மலையின் உச்சியை அடைந்தார். அதையடுத்து, பாஹாங் மாநிலத்தில் உள்ள கெமரன் மலையில் இருக்கும் ஜி7 மலையில் அவர் ஏறினார்.

