அன்வார்: அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மலாயில் எழுதப்பட்டிருக்க வேண்டும்

1 mins read
26357537-cc98-485d-9395-2240d55abe5e
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ராய்ட்டர்ஸ்

சைபர்ஜெயா: அரசாங்க அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மலாய் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

மலாய் மொழியில் எழுதப்படாத கடிதங்கள் கடிதம் எழுதியவருக்கே திருப்பி அனுப்பப்படும் என்றார் அவர்.

இந்த விதிமுறையை மெத்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று திரு அன்வார் கூறினார்.

இதுகுறித்து மேல்விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

மலேசியாவின் தேசிய மொழியான மலாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொருளியல் வளர்ச்சியில் மட்டும் வெற்றி கண்டால் அது எவ்வித பலனையும் அளிக்காது என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் தம்மை குறுகிய மனப்பான்மை உள்ளவராக்கிவிடாது என்றார் அவர்.

ஆங்கில மொழியில் ஆற்றல்மிக்கவராக இருப்பதால்தான் தம்மால் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்ற முடிந்ததாக அவர் கூறினார்.

வாசிக்கும் பழக்கம் முக்கியம் என்று இளம் தலைமுறையினருக்கு பிரதமர் அன்வார் நினைவூட்டினார்.

அண்மை ஆண்டுகளாக, சமூக ஊடகப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்