தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் குறைந்தது 16 பேர் சுட்டுக் கொலை; சந்தேக நபருக்கு வலைவீச்சு

3 mins read
9def2f77-0505-4c65-b1d0-5110867818d9
ஸ்பேர்டைம் ரெக்கிரியேஷன் உருட்டுப் பந்து நிலையம், வால்மார்ட் விநியோகிப்பு நிலையம், ஸ்கீம்ஜீஸ் மதுபானக் கூடம் ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கிக்காரன் கண்ணில் பட்டவர்களை சரமாரியாகச் சுட்டான். சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லிவிஸ்டன்: அமெரிக்காவில் 16 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சந்தேக நபரை காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.

மெய்ன் மாநிலத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 முதல் 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் லிவிஸ்டன் காவல்துறை தெரிவித்தது. ஆனால், விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

புதன்கிழமை இரவு லிவிஸ்டனில் துப்பாக்கிக்காரன் ஒருவன் அனைவரையும் சுட்டதாகவும் அது கூறியது.

பகுதி தானியங்கி துப்பாக்கி போலத் தோற்றமளிக்கும் துப்பாக்கியை ஏந்திய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ராபர்ட் ஆர். கார்ட், 40, என்பவரை இந்தச் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவராக மாநில, உள்ளூர் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

முன்னதாக துப்பாக்கியுடன் காணப்பட்ட சந்தேக நபரின் மூன்று புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டிருந்தது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவ படங்களில் ஒன்றில், பழுப்பு நிற தலையை மூடும் சட்டை, ஜீன்ஸ் அணிந்திருந்த தாடி வைத்திருந்த ஒருவன் துப்பாக்கியால் சுடுவதுபோல நின்றிருந்தான். அன்ட்ரோஸ்கோகின் கவுன்டியின் ஷெரிஃப் அலுவலகம் அப்படத்தை வெளியிட்டிருந்தது.

“ராபர்ட் ஆர்.கார்டை தேடும் பணியில் மெய்ன் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,” என்று அம்மாநிலப் பொதுப் பாதுகாப்பு ஆணையர் மைக் சாசுக் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

மெய்ன் சட்ட அமலாக்கப் பிரிவின் வெளியீடு, கார்டை பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் பயிற்றுவிப்பாளர் என்றும் அமெரிக்க ராணுவத்தின் தயார்நிலை உறுப்பினர் என்றும் அடையாளம் கண்டுள்ளதாக பல ஊடகங்கள் தெரிவித்தன.

அண்மைக் காலமாக கார்டுக்கு குரல்கள் கேட்பது உள்பட மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் தேசிய காவல்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாகவும் அவன் மிரட்டல் விடுத்ததாகவும் அந்த வெளியீடு குறிப்பிட்டுள்ளது.

“துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பொதுமக்கள் வீட்டைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே இருக்கும்படி அறிவுறுத்தினோம்,” என்று எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் காவல்துறை குறிப்பிட்டது.

துப்பாக்கிச் சூடு பல இடங்களில் நடந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று வெவ்வேறு வர்த்தக இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக லிவிஸ்டன் காவல்துறையை மேற்கோள்காட்டி சன் சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது.

மதுபானக் கூடத்திலிருந்து உருட்டுப் பந்து நிலையம் 6.5 கிலோ மீட்டர் தொலைவிலும் வால்மார்ட் விநியோகிப்பு நிலையம் 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

லிவிஸ்டனில் உள்ள மத்திய மெய்னில் உள்ள மருத்துவ நிலையம் மற்ற மருத்துவமனைகளுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை ஒருங்கிணைத்து வருகிறது.

துப்பாக்கிச் சூடு பற்றி அதிபர் ஜோ பைடனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்துள்ள மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். அப்போது எல் பாசோ வால்மார்ட் கடையில் 23 பேர் உயிரிழந்தனர்.

2020ஆம் ஆண்டில் தொடங்கிய கொள்ளைநோய்க்குப் பிறகு அமெரிக்காவில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நபர்கள் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் 647 அத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 2023ல் 679 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்