தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை; தரைவழியாக நுழையத் தயாராகிறது

2 mins read
இரண்டு நாடுகள் தீர்வுக்கு அமெரிக்கா வலியுறுத்து
05995363-c565-44af-890d-14ec6a72356d
காயம் அடைந்த குழந்தையை மீட்டு பாலஸ்தீனர் ஒருவர் தூக்கிச் செல்கிறார். - படம்: இபிஏ

காஸா: ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. அதே சமயத்தில் தரை வழியாக காஸாவுக்குள் நுழையவும் அது தயாராகி வருகிறது.

மற்றொரு நிலவரத்தில் மின்சாரம் இல்லாததால் நிவாரணப் பொருள்களை ஐநா எடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேஸ் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியதால் மூண்ட போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எதிர்காலத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு தனித்தனி நாடு என்ற தீர்வு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் அருகருகே பாதுகாப்புடனும் மதிப்புடனும் அமைதியுடனும் வாழ சம உரிமை இருக்கிறது,” என்று வாஷிங்டனுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் வருகையளித்துள்ள நிலையில் கூட்டு அறிக்கையில் திரு ஜோ பைடன் குறிப்பிட்டார்.

ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதில் 1,400 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சுமார் இருநூறு பேரை ஹமாஸ் பிணைப் பிடித்துச் சென்றுள்ளது. இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு வழக்க நிலைக்குத் திரும்பக் கூடாது என்பதற்காக ஹமாஸ் இதனைச் செய்துள்ளது என்று தாம் நம்புவதாக திரு பைடன் கூறினார்.

இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் காஸாவில் 6,500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டார சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஆனால் அந்த எண்ணிக்கையை ராய்ட்டர்ஸால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், இஸ்ரேல்-காஸா போர் மற்ற வட்டாரங்களுக்கு பரவும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அப்பால் போர் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்தப் போரில் மற்றவர்களின் குற்றத்திற்காக அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்று புட்டின் தெரிவித்தார்.

“இன்றைய நமது பணி, எங்கள் முக்கிய பணி, இரத்தம் சிந்தப்படுவதையும் வன்முறைகளையும் தடுப்பதாகும்,” என்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த ரஷ்ய மதத் தலைவர்களுடனான சந்திப்பில் திரு புடின் கூறியதாக கிரெம்ளின் மாளிகையின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்