காஸா: ஹிஸ்புல்லா, ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆகிய மூன்று அமைப்புகளின் தலைவர்கள் கூடி மத்திய கிழக்கில் வெற்றி வியூக வழி பற்றி விவாதித்தனர்.
மத்திய கிழக்கில் இப்போது நிலவும் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் உண்மையான வெற்றியைச் சாதிக்க இந்த மூன்று தரப்புகளும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்கள் விவாதித்தனர். ஹிஸ்புல்லா தரப்பு புதன்கிழமை இதனை அறிவித்தது.
இந்தத் தரப்பின் ஊடகப் பிரிவு அந்தச் சந்திப்பைக் காட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டது.
ஹிஸ்புல்லா, ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆகிய மூன்று அமைப்புகளும் ஈரானின் ஆதரவு பெற்றவை.
ஹமாஸ் துணைத் தலைவர் ஷேக் சாலே அல்-அரோரி, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைமைச் செயலாளர் சையது அல்-நகாலா இருவரும் லெபனானில் பெய்ரூட் நகரின் ஓரிடத்தில் ஹிஸ்புல்லா தலைவர் சையது ஹாசன் நஸ்ருல்லாவை சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பு எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது பற்றி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
சந்திப்பு எப்போது நடந்தது என்பதையும் ஹிஸ்புல்லா தரப்பு தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் இப்போதைய மத்திய கிழக்குச் சூழலில் அந்த மூன்று அமைப்புகளுக்கும் இடையில் உறவுகள் வலுவடைந்து வருகின்றன என்பதற்கு ஆகப் புதிய சான்றாக அந்தச் சந்திப்பு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஹிஸ்புல்லாவும் ஹமாஸும் சிரியா உள்நாட்டுப் போரில் எதிரெதிர் தரப்புகளுக்கு ஆதரவு வழங்கி வந்தன.
இருந்தாலும் அந்த மூன்று தரப்புகளும் அண்மைய ஆண்டுகளில் கூட்டணி அமைத்து செயல்பட முடிவு செய்து வந்துள்ளன.
இஸ்ரேலை அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் திடீரென்று தாக்கியது. அதற்குப் பதிலடியாக காஸாவை இஸ்ரேல் தரைமட்டமாக்கி வருகிறது.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் கூடி இருக்கிறது. இந்த நிலையில் அந்த முத்தரப்பு சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
காஸா பகுதிக்குள் புகுந்து தரை வழியாக ஹமாஸை துடைத்தொழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது.
இப்போதைய போரில் ஹமாஸுக்கு ஆதரவான அமைப்புகளும் ஈடுபடக்கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலுடன் போரில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது என்று கருதி ஹிஸ்புல்லா களத்தில் குதித்தால், அதனால் ஏற்படக்கூடிய உயிருடற் சேதங்கள் பேரழிவாகப் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.

