வாஷிங்டன்: அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு வருகை புரியவுள்ள சீன உயர் அரசதந்திரி வாங் யியை அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக இதுபற்றி அறிந்துள்ள இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரு வாங் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லவனை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார். அப்பொழுது அவர் திரு ஜோ பைடனையும் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.
இவர்களது சந்திப்பு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறமுடியாது. எனினும், அதிகாரபூர்வமற்ற சந்திப்பாக இருந்தாலும் ஜி-20 மாநாட்டின் பக்கவாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு அடுத்த நிலையில் உள்ள பிரதமர் லி கெகியாங்கை புதுடெல்லியில் சந்தித்த பின் சீனாவின் மிக உயரிய அதிகாரி ஒருவரை திரு பைடன் சந்திப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸியும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை அமெரிக்க, சீன அதிகாரிகள் கவனித்து வரும் வேளையில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

