கோலா திரெங்கானு: பல மணி நேரம் காரில் விடப்பட்ட 16 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. மலேசியாவின் திரெங்கானுவில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
குழந்தையின் தந்தை பணிபுரியும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகல் நேரப் பராமரிப்பு மையத்திற்கு தனது மகளை அனுப்ப அந்தத் தந்தை மறந்துவிட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலை 4.30 மணியளவில் குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் விட மறந்தது நினைவுக்கு வந்ததுமே அவர் காருக்கு விரைந்தபோது குழந்தை மயக்கமடைந்திருந்தது.
பெயர் குறிப்பிடப்படாத தந்தை, குழந்தையை பல்கலைக்கழகத்தின் சுகாதார மையத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹீம் எம் டி டின் கூறினார்.
“சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிந்தனர்,” என்று திரு ரஹீம் கூறினார்.
குழந்தைச் சட்டம் 2001ன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ காயப்படும் வகையில் குழந்தைகளைத் தவறாக நடத்துவது, புறக்கணிப்பது, கைவிடுவது போன்ற செயல்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 ரிங்கிட் (5,700 சிங்கப்பூர் வெள்ளி) வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஒரு மாதத்திற்குள் மலேசியாவில் நடந்திருக்கும் இத்தகைய இரண்டாவது சம்பவம் இது.
அக்டோபர் மாதம், கோலாலம்பூரில் எட்டு மாதப் பெண் குழந்தை, மருத்துவராக இருக்கும் தனது தாயார் 10 மணிநேரம் காரில் விடப்பட்டதால் இறந்தது.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பரில், ஜப்பானின் சுயாமா நகரில் வெப்பமான காலத்தில் குறைந்தது ஒன்பது மணிநேரம் காரில் விடப்பட்ட இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான். கவனக்குறைவால் மரணம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் சிறுவனின் பாட்டியான செட்சுகோ ஷிபாதா கைது செய்யப்பட்டார்.

