சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஐந்து நாள்களாகக் கொழுந்துவிட்டு எரியும் புதர்த் தீயை அணைக்கத் தீயணைப்புப் படையினர் திண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் இதுவரை ஒருவர் தீக்குப் பலியாகியுள்ளதாகவும் 32 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகவும் வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடியுடன் கூடிய சிறிதளவு மழையால் மின்னல் தாக்கி, நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அறியப்படுகிறது. இதனால், மாநிலத்தின் வறண்ட புதர் நிலத்தில் ஆங்காங்கே தீ மூள்வதாகத் தீயணைப்பு அதிகாரிகள் கூறினர்.
தீயணைப்புப் படையினர் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 20 புதர்த் தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தப் போராடி வருவதாகக் கூறப்பட்டது.
வியாழக்கிழமை இரவு சுமார் 250 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறித் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

