கரடிகளைச் சுட்டால் வெகுமதி

கரடிகளைச் சுட்டால் வெகுமதி

1 mins read
d5cb7d86-e60e-4d55-8820-3c71812c0f8f
ஜப்பானிய வேட்டைக்காரர்கள் கொன்ற இந்தக் கரடி, 66 பசுக்களைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் மனிதர்களைக் கரடிகள் தாக்கும் சம்பவங்கள் என்றும் இல்லாத எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளதால் கரடிகளைச் சுடுவோருக்கு சன்மானம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேட்டைக்காரர்கள் சுடும் ஒவ்வொரு கரடிக்கும் 5,000 யென் (S$45.60) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் அக்டோபர் வரை கரடிகள் தாக்கியதாக சுமார் 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2020ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 158 சம்பவங்களை இது மிஞ்சிவிட்டதாக அந்நாட்டு என்எச்கே தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

குறைந்தது மூவர் கரடிகளின் பிடியில் இறந்துவிட்டதாகவும் அவர்களில் ஒருவர் 79 வயது மூதாட்டி என்றும் கூறப்படுகிறது. மூதாட்டி அவரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தோக்கியோவின் நகர்ப்புற எல்லைகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளதாகவும் என்எச்கே தெரிவித்தது. கரடிகள் விரும்பி நாடும் உணவு, தேவையான அளவுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவை உணவு தேடி மனிதர்கள் வாழும் இடங்களுக்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்