தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் தேர்வு

2 mins read
2e7bed0f-afe6-4ab9-9ad9-888d7f20e11c
மலேசியாவின் அடுத்த மாமன்னரின் தேர்வுக்குப் பின்னர் கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் தற்போதைய மாமன்னரும் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவும் (இடது) ஜோகூர் சுல்தான் இப்ராகிமும். - படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரை மலேசிய மன்னர்கள் தேர்ந்து எடுத்து உள்ளனர்.

மலேசியாவில் மாமன்னர் பதவி என்பது சடங்குபூர்வமானது. ஆயினும் அண்மைய ஆண்டுகளாக அங்கு நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக மாமன்னர் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

நாட்டின் கடைசி மூன்று பிரதமர்களைத் தேர்ந்து எடுக்கும் பொறுப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டார்.

கூட்டரசு ஆட்சிமுறை மன்னர்களுக்கு சில விருப்புரிமை அதிகாரங்களை வழங்குகிறது. அதே நேரம் மாமன்னர் என்பவர் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் ஆலோசகராக இருப்பார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமர் பொறுப்பில் அமர வைக்கும் அதிகாரத்தை மாமன்னருக்கு கூட்டரசு ஆட்சிமுறை வழங்குகிறது.

இருப்பினும் 2020ஆம் ஆண்டு வரை அந்த அதிகாரத்தை மாமன்னர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த அம்னோ, பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் எழுந்த நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக மாமன்னர் அப்துல்லா அகமது ஷா அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவானது.

மலேசியாவில் அரச குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் மன்னர்களாக உள்ளனர்.

அந்தப் பதவி ஐந்தாண்டுகளுக்கு உரியது. நாடாளுமன்ற ஜனநாயக நாடான மலேசியாவில் உள்ள மாநிலங்களின் ஆட்சியாளர்களாக மன்னர்கள் உள்ளனர்.

மன்னர்களில் ஒருவர் மாமன்னராக அரச குடும்பங்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்.

அவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தர், 2024 ஜனவரி 31ஆம் தேதி மாமன்னர் பொறுப்பை தற்போதைய மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவிடம் இருந்து பெற்றுக்கொள்வார் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதர மன்னர்களைப் போல் அல்லாமல் சுல்தான் இப்ராகிம் அரசியல் பற்றி வெளிப்படையாகக் பேசக்கூடியவர். பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் தமக்கும் இடையில் நல்லுறவு இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

நீதியும், ஞானமும், பொது மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறையும் கொண்ட ஒரு மன்னரின் ஆட்சியில் இருந்து அரசும் மக்களும் ஏராளமான ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் பெறுவார்கள் என்று பிரதமர் தனது உரையில் கூறினார். “எதிர்காலத்தில் அவரது மாட்சிமையின் ஆட்சியுடன், மலேசியா ஒற்றுமை மற்றும் நீண்ட கால செழிப்புக்கான ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதிக்கப்படும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.”

குறிப்புச் சொற்கள்