தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாக்குதலுக்குப் பதிலடி: சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்

2 mins read
0475d817-3574-48b8-b23a-41abbd64cb39
காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியோரை பாலஸ்தீனர்கள் தேடுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள இரு ஆயுதக் கிடங்குகளில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. கடந்த வாரம் அமெரிக்கப் படைகளை ஈரானிய ஆதரவுப் படையினர் தாக்கியதற்குப் பதிலடியாக சிரியா தாக்குதல் நடைபெற்றது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் எழுந்திருக்கும் கவலைகள் அதிகரித்திருக்கும் வேளையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இடம்பெற்று உள்ளது. மேலும், போர் மத்திய கிழக்கில் பரவும் அபாயத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

ஈரானிய புரட்சிப் படையினர் பயன்படுத்தி வந்த இரண்டு கூடங்களின் மீது தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக பென்டகன் கூறியது. ஈரான் ஆதரவு பெற்ற படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

அமெரிக்கப் படையினர் மீதும் அதன் நட்பு நாடுகளின் படையினர் மீதும் கடந்த வாரம் சிரியாவிலும் ஈராக்கிலும் 19 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானிய ஆதரவுப் படையினர் அந்தத் தாக்குதல்களை நடத்தியதாக நம்பப்படுகிறது.

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய பேராளிக் குழுக்கள் ஈரான் ஆதரவு பெற்றவை.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படையின் தாக்குதல் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 9.30 மணி) நிகழ்ந்தது.

ஈராக் எல்லையில் உள்ள சிரிய நகரான அபு கமால் அருகே அமெரிக்கப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன. அந்தப் படைகளின் எஃப்-16 போர் விமானங்கள் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கத் தற்காப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுஸைன் அமிர்-அப்துல்லாஹியன் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் வியாழக்கிழமை உரையாற்றினார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் நீடித்தால், அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்படும் என்று அப்போது அவர் எச்சரித்தார்.

“ஈராக்கிலும் சிரியாவிலும் நிலைகொண்டு உள்ள அமெரிக்கப் படையினர் மீது அக்டோபர் 17ஆம் தேதி ஈரான் ஆதரவுப் படையினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“அமெரிக்கப் படைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை. அதுபோன்ற தாக்குதல்கள் முறியடிக்கப்படும்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்